வரலாறு காணாத வறட்சியை சந்திக்க உள்ளதா நெல்லை?

வரலாறு காணாத வறட்சியை சந்திக்க உள்ளதா நெல்லை?
X

தாமிரபரணி ஆறு.

தமிழகத்தின் வளமான மாவட்டமான நெல்லை பெரும் வறட்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

தென் தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரபரணி நதியாகும். தாமிரபரணியின் குறுக்கே மேற்குத் தொடர்சி மலை

யில் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு தென் தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.

143 அடி உயரத்துடன் 5500 மி.க.அடி நீர் கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு 1943 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணைக்கட்டு மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தாமிரபரணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைத்து அதன்மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

வரலாறு சொல்வது என்ன?: பருவமழை பொய்த்ததையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடியாக ஆனது. அதன் பின்னர் 2019 ம் ஆண்டு மே மாதத்தில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 10 அடிக்கு கீழ் குறைந்தது. பாபநாசம் அணை வரலாற்றில் முதல் முறையாக 2019 ம் ஆண்டு தான் அணை நீர்மட்டம் 10 அடிக்கு கீழ் குறைந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பெய்யாததால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் போதிய மழையின்றி அணைகளுக்கு நீர் வரத்துக் குறைந்தது. இதையடுத்து அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தது.

இதையடுத்து அணையின் நீர்மட்டம் தற்போது 17 அடியாக உள்ளது. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பொய்த்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து முழுவதுமாக குறைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி மழை பொழிவு வரும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாததால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை.

நெல்லை மாவட்டத்தில் மழை பொழியுமா?

தற்போது மார்ச் 1 முதல் இன்று வரையிலான கோடைகாலத்தில் நெல்லை மாவட்டம் சராசரியாக வெறும் 30 மி.மீ., மழையை பெற்றுள்ளது. இது இயல்பை விட 58 % மழை பற்றாக்குறையாகும். வரும் நாட்களிலும் நெல்லை மாவட்டத்தில் மழை பொழிவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் நெல்லை மாவட்டத்தில் 100° F க்கு மேல் வெப்பநிலை பதிவாகும். இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் குறையும் என்பதால் பாபநாசம் அணை வரலாற்றில் இரண்டாவது முறையாக 10 அடிக்கு கீழ் அணையின் நீர்மட்டம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செல்லும் போது நெல்லையும், தாமிரபரணி ஆற்றுப்படுகையும், சுற்றிலும் உள்ள வாழ்விடங்களும் இதுவரை இல்லாத அளவு வறட்சியை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தின் வளமான மாவட்டமான நெல்லையின் நிலையே இப்படி என்றால் தமிழகத்தின் பிற மாவட்டங்களின் நிலையை நினைத்தாலே சற்று பதட்டம் உருவாகத்தான் செய்கிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil