கொங்கு மண்டல பகுதிகளில் கோட்டை விடுகிறதா அ.தி.மு.க.,?
அதிமுக வின் வேட்பாளர்கள் அறிவிப்பை தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டது முதலே அதிமுகவிற்குள் கோஷ்டி பூசல் அதிகரித்து வருகிறது. அதிமுகவின் தலைவர்களுள் ஒருவரான கே.பி முனுசாமி தனது மகனுக்கு கிருஷ்ணகிரியில் சீட் எதிர்பார்த்தார். ஜெயக்குமார் மகனுக்கும், முன்னாள் சபாநாயகர் தனபால் பையனுக்கும் தேர்தலில் போட்டியிட எடப்பாடி சீட் ஒதுக்கியது கே.பி.முனுசாமியை கடுப்பாக்கியுள்ளது. அதனால் அவர் தேர்தல் பணியில் முழுமையாய் ஈடுபடவில்லை.
அதேபோல பொள்ளாச்சி ஜெயராமனும் தனது மகனுக்கு சீட் எதிர்பார்த்து கிடைக்காத விரக்தியில் பொள்ளாச்சி தொகுதியை பற்றி கண்டுக்கொள்ளாமல் "திருப்பூருக்குத்தான் எனக்கு தேர்தல் பொறுப்பு கொடுக்கப்பட்டுளள்து" ஆகவே நான் அங்கு செல்கிறேன் என சொல்லிவிட்டு திருப்பூர் பண்ணை வீட்டிலேயே இருக்கிறாராம்.
அதேபோல திருப்பூருக்கு அறிமுகமே இல்லாத வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி நிறுத்தியது திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கே திருப்பூர் ஒதுக்கப்பட்டதால் இம்முறை நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என எண்ணி இருந்த உள்ளூர் அதிமுக நிர்வாகிகளுக்கு இந்த வேட்பாளர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வேலுமணி ஆதாரவாளரை ஓரங்கட்டி விட்டு செங்கோட்டையன் ஆதரவாளருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே கொங்கு பகுதியில் வேலுமணிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே நிலவி வந்த புகைச்சல் இப்போது பெரும் புயலாக வீச தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வேலுமணியின் வேகமும் குறைந்துள்ளது. கோவையில் கூட ஓரிரு நாள் சம்பிரதாயத்திற்காக பிரச்சாரம் செய்து விட்டு அதோடு ஒதுங்கி கொண்டார் வேலுமணி.
ஈரோடு தொகுதியில் கேவிஆர் தனது மகனுக்கு சீட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் திடீரென பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமாருக்கு சீட் கொடுத்ததால் கே.வி.ஆர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளார். ஆற்றல் அசோக்குமார் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்து 3 மாதங்களே ஆகி உள்ளது. பெரும் கோடீஸ்வரரான அசோக்குமார் எடப்பாடிக்கு மட்டும் 100 கோடி ரூபாயினை கொடுத்து விட்டு தேர்தலில் சீட் பெற்றுவிட்டார் என்ற புகைச்சலில் ராமலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் உள்ளனர். உள்ளூர் அதிமுக நிர்வாகிகளையும் பெரிய அளவில் கவனிப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தானாம். அதோடு காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்க நேற்று பாஜகவில் இருந்து வந்த அசோக்குமாருக்கு சீட் கொடுத்ததால் அவருக்கு எதிராக அதிமுக நிர்வாகிகளே அணிதிரண்டு நிற்கின்றனர். இவரை நாம் இன்று ஆதரித்தால் நாளைக்கு பாஜகவுக்கு ஓடிவிடுவார் என கருதும் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் அசோக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூட செல்வதில்லையாம்.
கொங்கு பகுதி ஓட்டினை வைத்து தான் கட்சிக்குள் தனது செல்வாக்கை நிலைநிறுத்தி வந்தார் எடப்பாடி. இந்த முறை அதிமுகவின் கையை விட்டு கொங்கு பகுதியும் போய்விடும் சூழல் தான் தற்போது தேர்தல் களத்தில் நிலவுவதாக செய்தி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu