முதுவாக்குடி வீடு கட்டுவதில் முறைகேடு: கலெக்டர், எஸ்.பி., முதல்வரிடம் புகார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
Today Theni News -முதுவாக்குடியில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து தேனி கலெக்டர், எஸ்.பி., மற்றும் தமிழக முதல்வரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், முதல்வர், கலெக்டர், எஸ்.பி.,க்கு அனுப்பி உள்ள புகாரில் கூறியுள்ளதாவது:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா, கொட்டக்குடி பஞ்சாயத்தின் கீழ் வரும் முதுவார்குடி எனும் பழங்குடியின கிராமத்தில், 31 குடும்பம் ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பாரம்பரிய சிறப்பு கொண்ட இந்த முதுவார் சமூகம் வாழும் இடைமலைக்குடி எனும் பழங்குடியின கிராமத்தைத்தான், கேரள மாநில அரசு கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் ஆதிவாசி பஞ்சாயத்தாக அறிவித்தது. அந்த அளவிற்கு பண்பாட்டுச் செழுமை கொண்ட ஒரு சமூகம் இந்த முதுவான் சமூகம்.
கிடைத்த வேலைக்கு செல்வது, தேன் எடுப்பது, வனத்துறையோடு காவல் பணிகளில் ஈடுபடுவது என நிரந்தர வேலை எதுவுமற்ற இந்த மக்கள், அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
வருடத்தில் ஒன்பது மாதம் மழை பெய்யும் இந்த கிராமத்தில், அந்த மக்கள் வாழ்வதற்கு உண்டான எந்த சூழ்நிலையும் இல்லாத நிலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
பழங்குடி மக்களுக்காக அரசால் ஒதுக்கப்படும் பெரிய அளவிலான உதவித்தொகைகள் எதுவும் முதுவாக்குடிக்கு வந்து சேர்ந்ததாக தெரியவில்லை. அனாமதேயமான வாழ்க்கை ஒன்றை அந்த வனாந்திரத்தில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
நாட்டின் முதல் குடிமகளாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் அரியணையில் அமர்ந்திருக்கும் இந்தக் காலத்தில்தான் இந்த முதுவார் குடி கேட்க நாதியற்றுக் கிடக்கிறது.
தொலைத்தொடர்பு வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி என எது வேண்டுமானாலும் இந்த அப்பாவிகள் அங்கிருந்து நடந்தே குரங்கணி வரை வந்து, அங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போடிநாயக்கனூருக்கு சென்றால்தான் நிவாரணம்.
காட்டு மாடுகள் நிறைந்து கிடக்கும் இந்த பெருவனத்தில், முதுவாக்குடியில் ஒரு இருசக்கர வாகனம் கூட இல்லை.
பெரிய அளவிற்கு கல்வி கற்பதற்கு அவர்கள் தூண்டப்படாத காரணத்தினால், அரசு வேலைக்கு இன்று வரை முதுவாக்குடியில் இருந்து ஒருவர் கூட செல்லவில்லை. அரசு வேலை என்பது ஒரு எட்டாக்கனியாகவே முதுவாக்குடி மக்களுக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு போடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, பசுமை வீடு கட்டும் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 வீடுகள் அடையாளமிடப்பட்டது.
பயனாளிகளை அடையாளம் கண்டு, வீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது களத்திற்கு வந்த போடி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள்,குரங்கணியைச் சேர்ந்த பாண்டி என்பவரிடம் பேசி, (இவர் கொட்டக்குடி பஞ்சாயத்து துணை தலைவரின் கணவர்) வீடு கட்டுமான பணிகளை ஒப்படைத்தனர்.
கடந்த 2019 இறுதியில் வீட்டு வேலையை ஆரம்பித்த பாண்டி, முதல் வேலையாக செய்த காரியம், பயனாளிகளிடமிருந்து வங்கி பாஸ்புக், ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை வாங்கி தன் கைவசம் வைத்துக் கொண்டார். கூடுதலாக வங்கி பாஸ்புக்கில் முதல் பக்கத்தில் பயனாளிகளின் மொபைல் போன் எண்களை அழித்து விட்டு, தன்னுடைய வீட்டு நம்பரை எழுதியிருக்கிறார்.
இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் போடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள். பயனாளிகளிடம் எந்த தகவலும் கூறாமல் தானே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களின் துணையோடு கூட்டு சதி செய்து, அந்த வாயில்லா பழங்குடி அப்பாவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிமெண்டை எடுப்பது, கம்பியை எடுப்பது, பணத்தை எடுப்பது என பல்வேறு முறைகேடுகளை செய்து வந்திருக்கிறார்.
ஒவ்வொரு படிக்கும் ஒரு தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை தாண்டி, ஒரே தொகையாக போடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் 3,43, 065 ருபாய் பாண்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த தொகை 85,494 ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
2020 க்குள் இந்தத் தொகையை எடுத்துவிட்ட பாண்டி,400 மூடை சிமெண்ட்களையும், 3 டன் கம்பிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களின் துணையோடு எடுக்கிறார்.
ஒதுக்கீடு செய்யப்பட்ட 14 வீடுகளில் மொத்தம் ஆறு வீடுகளில் அடிப்படை வேலைகளை மட்டுமே செய்த பாண்டிக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்கிற கேள்வி கடந்த 2020 லேயே எழுந்தது. ஆனால் பெருந்தொற்று வந்ததால் எந்த வேலையும் முதுவாக்குடியில் நடக்கவில்லை.
இந்த நிலையில் பெரும் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததும் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில், முதுவார்குடி மக்கள் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தை அணுகினார்கள்.
சங்க நிர்வாகிகள் அனைவரும் முதுவாக்குடி மக்களை அழைத்துக் கொண்டு, நிவாரணம் கேட்பதற்காக,தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து ஆறு முறை மனு கொடுத்து இருக்கிறோம். தேனி மாவட்ட திட்ட இயக்குனரையும் சந்தித்து அந்த மக்களின் இயலாமையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
பல கட்டமாக நடந்த பயணங்களுக்கு பிறகு,வீடு கட்டும் பணிகள் தொடங்கினாலும் முழுமையாக நிறைவடையவில்லை.
பழங்குடி மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை பாண்டி கையாடல் செய்வதற்கு மூல காரணமாக இருந்த போடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த புகார் தொடர்பாக தேனி மாவட்ட திட்ட இயக்குனரிடமும் விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளோம். இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டால் மட்டுமே இந்த விஷயத்தில் தீர்வு கிடைக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu