விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு : அசத்தும் தேனி மாவட்ட டாக்டர்கள்..!
ஆடு, மாடு, கோழி என ஒருங்கிணைந்த பண்ணை (கோப்பு படம்)
விவசாயத்திற்கு எதிர்காலம் இல்லையோ என பலரும் வருத்தப்பட்டு வரும் சூழலில், தேனி மாவட்ட டாக்டர்கள் ஒரு படி மேலே சென்று ‛சத்தமின்றி விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு’ பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
‛எதிர்கால விவசாயம் குறித்த கவலையும், இயற்கையை பேண வேண்டுமே என்ற அக்கறையும் ‛புவி வெப்பமயமாதலை தடுக்கவும், உயரும் கடல் மட்டத்தில் இருந்து பூமியின் நிலப்பரப்புகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளும்’ தான் இன்று சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
மீம்ஸ் கிரியேட்டர்கள் பலரும், ‛நெல்லை நெட்டில் டவுன் லோடு பண்ண முடியாது’, ‛எங்களுக்கு பொறியாளர் வேண்டாம், விவசாயம் செய்யத்தான் வாலிபர்கள் தேவை’ என்ற ஏக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சமூக ஊடகங்களில் வரும் விவசாயம் சார்ந்த கவலை தோய்ந்த பதிவுகளை படித்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ‛மனதிற்குள் சிரிக்கின்றனர்’. காரணம் அவர்கள் விவசாயம் செய்வதும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபடுவதும் இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாது.
தேனி மாவட்டத்தில் உள்ள டாக்டர்களில் பாதிக்கும் அதிகமானோருக்கு சொந்த நிலம் உள்ளது. பலர் தங்களது வருவாயில் பெரும் பகுதியினை விவசாய நிலத்தில் முதலீடு செய்கின்றனர். நாம் தான் டாக்டராகி விட்டோமே, இனி எதற்கு விவசாயம் என்று இவர்கள் யாரும் தங்கள் நிலங்களை விற்றுவிடவில்லை. மாறாக தங்கள் நிலங்களில் மிகவும் அக்கறையாக விவசாயம் செய்கின்றனர். ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர்.
பல டாக்டர்கள் சத்தமின்றி கண்மாய் துார்வாறும் பணிகளிலும், மரக்கன்றுகளை நடும் பணிகளிலும், மரக்கன்றுகளை நட ஆர்வம் காட்டுபவர்களுக்கு இலவசமாக கன்றுகள் வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதனை யாரும் பெருமையாக வெளியே சொல்லிக்கொள்வதில்லை. இதனால் வெளியுலகிற்கு டாக்டர்கள் விவசாயம் செய்வதும், மருத்துவத்துறையில் உயர் படிப்பு படித்திருந்தாலும் விவசாயி போன்றே வாழ்வதும் பலருக்கும் தெரியவே தெரியாது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: தினமும் நோயாளிகளுடன் பல மணி நேரம் செலவிடுகிறோம். பல மணி நேரம் ஏ.சி., அறைக்குள் செலவிடுகிறோம். ஏ.சி., அறையில் வாழ்வது போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இல்லை. மருத்துவம் படித்ததால் ‛இயற்கையின் சிறப்புகளும், பெருமைகளும்’ எங்களுக்கு நன்றாகவே தெரியும். மற்ற துறைகளை விட மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ‛மனஅழுத்தம்’ மிக, மிக அதிகம். இதற்காக நாங்கள் யாரிடமும் சிசிச்சைக்கு செல்ல முடியாது.
‛இயற்கையுடன் சேர்ந்தே வாழ்வது மட்டுமே மனஅழுத்தத்தை தவிர்க்கும் விலை மதிப்பில்லா மருந்து என்பது எங்களுக்கு தெரியும்’. எனவே எங்களிடம் உள்ள நிலத்தில் விவசாயம் செய்கிறோம். எங்கள் நிலங்களில் ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கிறோம். இதற்கு உதவியாக சில தொழிலாளர்களை உடன் வைத்துக் கொண்டுள்ளோம். நாங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்கள் நிலங்களுக்கு செல்கிறோம்.
அங்கு வெயிலில் சில மணி நேரம் செலவிடுகிறோம். அப்போது நாங்களும் பனியன் அணிந்து கொள்வோம். காலுக்கு செருப்பு கூட போடுவதில்லை. எங்கள் உடல் திறனை அதிகரிக்க விவசாய வேலைகளை கூட செய்கிறோம். இதில் எங்களுக்கு கிடைக்கும் ‛ரிலாக்ஸ்’ எத்தனை லட்சம் ரூபாய் செலவிட்டாலும் வேறு எந்த சூழலிலும் கிடைக்காது. எனவே விவசாய தொழில்களை விரும்பியே செய்கிறோம். ஆனால் இதனை எங்கள் நலன், சமூக நலன் கருதி செய்வதால் வெளியே சொல்வதில்லை. இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu