பள்ளி மாணவ, மாணவிகள் வருகை கணக்கெடுத்து அறிக்கை அனுப்ப உத்தரவு
பைல் படம்
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, மொத்த மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை விவரங்களை கணக்கெடுத்து அனுப்ப அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களால் சுயநிதிப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்கும் சத்துணவு உள்ளிட்ட அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் வழங்கி இவர்களை தக்க வைத்துக்கொண்டு, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சியை உறுதி செய்வதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக அத்தனை மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவு வழங்க வேண்டும் என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது. காரணம் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளில் அரசு வழங்கும் சத்துணவினை சாப்பிடுவதில்லை. அப்படி சத்துணவு சாப்பிடாத மாணவ, மாணவிகளுக்கு அரசின் இதர சலுகைகள் வழங்குவதில் பின்னடைவு ஏற்படும். எனவே அனைவருக்கும் சத்துணவு வழங்க அதிகாரிகள் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தாமதம் ஆனாலும் இவர்களுக்கு சாப்பிடும் அளவு அரிசி, பருப்பு, முட்டை போன்றவற்றை வழங்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu