பெரியாறு அணையில் ஆய்வு நாடகம்! தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தி!

பெரியாறு அணையில் ஆய்வு நாடகம்!  தமிழக விவசாயிகள் கடும் அதிருப்தி!
X

பெரியாறு அணை பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து தமிழக பொறியாளர்களிடம் மனு கொடுத்த விவசாயிகள்.

பெரியாறு அணையில் ஆய்வு என்ற பெயரில் நடக்கும் நாடகத்தை பெரியாறு அணை விவசாயிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் எழுதியுள்ள கடித விவரம்:

அனுப்புதல் :

அனைத்து நிலை நிர்வாகிகள்

பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

பெறுதல்:

தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள்

துணைக் குழு

எங்களது கேள்விகள்...

1-முல்லைப் பெரியாறு அணைக்குள் பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் பணியில் இருக்கும் தமிழக பொறியாளர்கள், காவல் பணியில் கேரள காவலர்கள் என்பதை தாண்டி, அத்துமீறி அணைக்குள் பிரவேசிக்கும் எந்த துறையாக இருந்தாலும், தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் உள்ளே நுழையக்கூடாது.

2- பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 23 மரங்களில், எட்டு மரங்கள் பட்டுப்போய் சாய்ந்து விட்ட நிலையில், அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மீதமுள்ள 15 மரங்களை வெட்டுவதற்கும் மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட வேண்டும்.

3-கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்,முல்லைப் பெரியாறு அணையில் சம்பந்தமே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தி வரும், கேரளாவின் Minor Irrigation Department பொறியாளர்களை, அணையை விட்டு முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும்.

4-தளவாடப் பொருட்களை அணைக்குள் கொண்டு செல்லும் தரைவழிப் பாதையான வல்லக்கடவு பாதை, முற்றிலுமாக பழுதடைந்து இருக்கும் நிலையில், அந்தப் பாதையை சீரமைப்பதோடு, பெரியாறு புலிகள் காப்பக சோதனை சாவடியில் அணைக்குச் செல்லும் தமிழக வண்டிகளின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்தவும் மத்திய நீர்வள ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5-1960 ஆம் ஆண்டு முதல் பெரியாறு அணைக்கான மழைமானி அமைந்திருக்கும்,முல்லை கொடிக்கு சென்று வர தமிழக பொறியாளர்களுக்கு உரிமை இருந்த நிலையில், தற்போது அந்தப் பகுதியை பெரியார் புலிகள் காப்பகம், Core Zone ஆக அறிவித்ததோடு, கடந்த 2014 ஜூலை முதல் அனுமதியும் மறுத்து வருகிறது. எனவே பெரியார் அணையில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முல்லைக் கொடியில் அமைந்திருக்கும் மழை மானியை தமிழக படகிலேயே சென்று மழையளவை குறித்து வர அனுமதிக்க வேண்டும்

6-துணைக் குழுவில் சம்பந்தமே இல்லாமல் இடம் பெற்றிருக்கும், கேரளாவின் Minor Irrigation Department ன் இரண்டு பொறியாளர்கள், துணைக் குழுவை விட்டு வெளியேற்ற வேண்டும்.

8-கடந்த 2014 ஆம் ஆண்டு கொச்சி போர்ட் அத்தாரிட்டியின் அனுமதியைப் பெற்று இயங்க முடியாமல் அணையிலேயே காத்துக் கிடக்கும் 130 ஹெச்.பி கொண்ட, தமிழன்னை படகை இயக்குவதற்கு தொடர்ந்து தடை விதித்து வரும் பெரியார் புலிகள் காப்பகத்தின் தடையை நிறுத்தி வைத்து, படகை இயக்குவதற்கு மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும்.

9-மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவின்படி, சிமெண்ட் கிரௌட்டிங் வேலையை செய்வதற்கு 25 ஆண்டுகளாக தமிழக பொறியாளர்கள் அணையில் காத்திருக்கிறார்கள். மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டும், அந்த வேலையை தமிழக பொறியாளர்களால் முல்லைப் பெரியாறு அணையில் செய்ய முடியவில்லை. ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, சிமெண்ட் கிரௌட்டிங் வேலையை செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

10-ஆனவச்சால் கார் பார்க்கிங் பிரச்சனையில், ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதோடு, அநீதியான தீர்ப்பை வழங்கிய சர்வே ஆப் இந்தியாவின் அறிக்கையை திரும்ப பெற்று, அது நீர் தேங்கும் பகுதியில் தான் வருகிறது என்கிற உண்மையின் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.

11-தொடர்ந்து 12 மாதங்கள் அணையை முற்றாக ஆய்வு செய்ய வேண்டும் என்கிற மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, முறைப்படி 2026 ஆம் ஆண்டு ஆய்வை நடத்துவதற்கு நீர்வள ஆணையம் மறு உத்தரவை வெளியிட வேண்டும்.

12-2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகள், அதாவது 2026 வரை, அணையில் முழுமையான பராமரிப்பு பணிகளை தமிழகம் மேற்கொள்வதற்கு,மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட வேண்டும்.

13-அணைக்குள் தங்கி இருப்பவர்கள், வந்து போகிறவர்கள் எவராக இருந்தாலும், தினந்தோறும் வருகை பதிவேட்டில் கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும் என்கிற நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

14-தமிழக பொறியாளர்கள் மீதான பெரியார் புலிகள் காப்பகத்தின் தொடர் நெருக்கடிகளை குறைப்பதற்கு நீர்வள ஆணையம் ஆவண செய்ய வேண்டும்.

15-40 ஆண்டுகளாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஜலரத்னா மற்றும் கண்ணகி ஆகிய இரண்டு படகுகளுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு, தமிழன்னை படகை, அணையில் பொறியாளர்கள் பயன்படுத்த நீர்வள ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இன்று பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக்குழு ஆய்வு நடத்தியதை தமிழக பொறியாளர்கள் புறக்கணித்துள்ளனர். இது மிகவும் வரவேற்க தக்க விஷயம். பெரியாறு அணையி்ல் பராமரிப்பு பணிகளை செய்ய தேவையான பொருட்களை கொண்டு செல்ல விடாமல் தடுப்பவர்கள் ஆய்வு என்ற பெயரில் நடத்தும் நாடகத்தை தமிழக பொறியாளர்கள் புறக்கணித்தது மிகவும் நல்ல விஷயம். இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!