அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள்..!
பைல் படம்
பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலை மூலம் 20க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் நடத்தப்படுகின்றன.
இக்கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முழுமையாக பொருள்கள் வழங்கப்படுவதில்லை. தரக்குறைவான அரிசி, அதுவும் எடை குறைவாக, வழங்கப்படுகிறது. பலசரக்கு பொருள்களை நிர்பந்தம் செய்தும் விற்கின்றனர். பெரும்பாலான கடைகளில் சமையல் எண்ணெய், கோதுமை முறையாக வழங்கப்படுவதில்லை.
சர்வர் பிரச்னை, கைரேகை பதிவு என பல்வேறு காரணங்களைக் காட்டி பலமுறை பொதுமக்கள் அழைக்கழிக்கப்படுகின்றனர். அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்களை வியாபாரிகள் மூடைகளில் தினமும் கடத்திச் செல்வதாகவும் அதற்கு சில ஊழியர்கள் துணை புரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெளி மார்க்கெட்டில் படி ஒன்றுக்கு எட்டு ரூபாய் என்ற விலையில் அரிசி விற்கப்படுகிறது. வியாபாரிகள் வாங்கிச் சென்று அதனை மாவு அரைத்து விற்பனை செய்யும் நபர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். சில தெருக்களில் மாவை பொடியாக்கி விற்கும் பொருட்டு பகிரங்கமாகவே சாலையில் உலர வைத்துள்ளனர்.
ரேஷன் அரிசி மாவு அரைக்கும் மில்களும் தடையின்றி செயல்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு லாரியுடன் பிடிபட்ட ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. சில அரசியல் பிரமுகர்களுக்கும் வியாபார ரீதியான நிறுவனங்களுக்கும் அரிசி டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஒரே கடையில் சிலர் பணியில் இருப்பதும், சிலரை அடிக்கடி மாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. சில கடைகளில் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கார்டு பயனாளிகளும், சில கடைகளில் குறைந்த அளவு பயனாளிகளும் இருக்கின்றனர். வருமானம் அதிகம் உள்ள கடைகளுக்கு சிபாரிசு செல்வாக்கு, அரசியல் புலம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu