தடையின்றி கிடைக்கும் புகையிலை, கஞ்சா: தேனி மாவட்டத்தில் வாய்ப்புற்றுநோய் ‛அபாயம்’..!
புகையிலைப்பொருட்கள் (கோப்பு படம்)
தேனி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா வர்த்தகம் தடையின்றி நடப்பதால், தனியார் போக்குவரத்து பணியாளர்கள், கட்டுமான மற்றும் விவசாய தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் மிக, மிக எளிதாக கிடைக்கிறது. இதனால் தேனி மாவட்டத்தில் வாய்ப்புற்று நோய் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவ, சுகாதாரத்துறைகள் ‛பதட்டம்’ தெரிவித்துள்ளன.
தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அதேபோல் கஞ்சா கடத்தல், விற்பனையினை தடுக்க போலீசில் தனிப்படை பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு சென்று சேரும் அளவிற்கு இந்த பொருட்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சின்னமனுார், மார்க்கையன்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த வியாபாரம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது என்றே பல பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் மருத்துவ, மற்றும் சுகாதாரத்துறைகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். போலீசிடமும் புகார் தெரிவித்தும் பலன் இல்லை என பள்ளி ஆசிரியர்கள் வெளிப்படையாகவே புலம்புகின்றனர்.
இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கலப்படம் இல்லாத தனி கஞ்சாவை புகைத்தாலும், வாயில் வைத்து மென்றாலும் புற்றுநோய் வராது. ஆனால் கஞ்சா மூலம் புகையிலை பயன்படுத்துபவர்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் அவர்களது வாழ்க்கையை அழித்து விடும். எனவே தான் அரசு கஞ்சா பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இதனை விட பெரிய அபாயம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் அத்தனை பேரும், கஞ்சாவுடன் புகையிலை கலந்தே விற்கின்றனர். இரண்டும் கலந்து பயன்படுத்தும் போது, அதனை புகைப்பவர்களுக்கோ, வாயில் வைத்து சுவைப்பவர்களுக்கோ புற்றுநோய் வரும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்து விடும். புற்றுநோயுடன் அவர்கள் தன்நிலையும் மறந்து விடுவதால் (;நிரந்தர மதிமயக்கம்), அவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பத்தை வார்த்தைகளில் கொண்டு வர முடியாது.
அந்த அளவிற்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். தவிர தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தற்போது பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சில புகையிலை பொருட்கள் டீ பாக்கெட் போன்று மிகச்சிறிய அளவில் பேக்கிங் செய்து விற்பனை செய்கின்றனர்.
பலரும் இதனை வாங்கி உள்நாக்கின் அடியில் வைத்துக்கொள்கின்றனர். தனியார் பஸ், மினிபஸ், கனரக போக்குவரத்து வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள், கட்டுமான மற்றும் ஏழை தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் நிச்சயம் வாய் புற்றுநோய் வரும்.
இந்த உமிழ்நீர் விழுங்கும் போது வயிற்றுக்குள் சென்று வயிற்று புற்றுநோய், கல்லீரல், கணைய புற்றுநோய்களையும் உருவாக்கும். இதனால் அரசு இந்த விற்பனையினை தடை செய்துள்ளது. தேனி மாவட்டத்தில் இந்த தடையினை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தற்போது பள்ளி மாணவர்களுக்கு மிக, மிக எளிதாக கிடைக்கும் அளவிற்கு இந்த புகையிலை பொருட்கள், புகையிலை கலந்த கஞ்சா பொருட்கள் தடையின்றி வெளிப்படையாக விற்கப்படுகின்றன.
ஆனால் மாவட்ட நிர்வாகமோ, போலீஸ் நிர்வாகமோ அவர்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் சம்மந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேனி மாவட்டம் பெரிய நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu