போலீசாரை மிரட்டும் போலி மதுபான வியாபாரிகள்..!

போலீசாரை மிரட்டும் போலி மதுபான வியாபாரிகள்..!
X

சட்டத்துக்கு புறம்பான மது விற்பனை (கோப்பு படம்)

போலி மதுபான வியாபாரிகள் போலீசாரை கூட மிரட்டும் அளவு பின்புலத்தை உருவாக்கி விட்டனர்.

தேனி மாவட்டத்தில் போலி மதுபான வியாபாரிகள், ‛உன்னால் முடிந்ததை பார், நான் பலருக்கும் பணம் தருகிறேன்’ எனக்கூறி உள்ளூர் ஸ்டேஷன் போலீசாரை மிரட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான போலி மது வியாபாரிகளை கைது செய்ய முடியவில்லை என போலீசார் புலம்புகின்றனர்.

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, 24 மணி நேரமும் விற்பனை நடக்கிறது. போலீசாரின் கணக்குப்படி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் இந்த முறையற்ற வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மதுவாங்கி குடிக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.

தேனி எஸ்.பி., அனுமதியின்றி மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். யாராலும் தொட முடியாத உயரத்தில் இருந்த சிலர் கூட எஸ்.பி., விரித்த வலையில் சிக்கி சிறை சென்றனர். ஆனால் சில நாட்கள் மட்டுமே இந்த வேகம் இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

‛தாங்கள் மதுபானம் விற்பது குறித்து எஸ்.பி.,யிடம் போட்டுக்கொடுத்த, உள்ளூர் ஸ்டேஷன் போலீசாரை மதுபான வியபாரிகள் மிரட்டி வருகின்றனர். குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள அதிகாரிகளின் பெயர்களை கூறி, ‛இவர்களில் ஒவ்வொருவருக்கும் நான் மாதந்தோறும் இவ்வளவு பணம் தருகிறேன்.

அதனால் நான் மதுபானம் விற்றால் தான் இந்த பணத்தை எடுக்க முடியும். நீங்கள் ஏன் என்னைப்பற்றி எஸ்.பி.,யிடம் போட்டுக்கொடுக்கிறீர்கள்? நீங்களும் ஏதாவது வாங்கிக்கொண்டு ஒதுங்கி விடுங்கள்’ என அன்பான மிரட்டல் விடுகின்றனர்.

தேனி டி.எஸ்.பி., சப்-டிவிசன் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் நிலவுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நேரங்களிலும் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வது அதிகமாக உள்ளது. இதனால் எஸ்.பி., இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காதவரை மாவட்டம் முழுவதும் நடைபெறும் முறையற்ற மதுபான விற்பனையை தடை செய்ய முடியாது.

அப்படி தடை செய்தால், அரசியல் பின்புலம் உள்ள இந்த போலி மதுபான வியாபாரிகள் எங்களை மாறுதல் என்ற பெயரில் பழிவாங்கி விடுவார்கள். அல்லது வேறு ஏதாவது தொல்லை தருவார்கள். இதனால் தற்போது எஸ்.பி.,யிடம் உண்மையை சொல்லக்கூட எங்களுக்கு அச்சமாக உள்ளது.

எஸ்.பி., ஆரம்ப காலத்தில் கடைபிடித்த அதே கண்டிப்பினை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே தேனி மாவட்டத்தில் சமூக விரோத குற்றங்களைத் தடுக்க முடியும். ஆனால் இவ்வாறான கும்பலிடம் மாதந்தோறும் பணம் வாங்கும் சில போலீஸ் அதிகாரிகளாலும் எங்களுக்கு பிரச்னை நிலவுகிறது. இதனையும் மாவட்ட எஸ்.பி., தடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!