போலீசில் அவர்கள் சிக்கினார்களா? இல்லை போலீஸ் அவர்களிடம் சிக்கியதா?

Theni District News | Theni News

மது விற்பனை (கோப்பு படம்)

Theni District News -அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்டேஷன் ஜாமீனில் வெளிவந்தவர்கள், கோர்ட்டில் வழக்கினை முடித்துக் கொடுக்காமல் போலீசாரை அலைக்கழித்து வருகின்றனர்.

Theni District News -தேனி மாவட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகள், ஆறு நகராட்சிகள் மற்றும் 607 கிராமங்களிலும் பலர் அனுமதியின்றி மது விற்பனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் மாதாந்திர விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதால், கடை கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கிராமங்களில் வேலையின்றி இருப்பவர்களை தேடிப்பிடித்து மதுபாட்டில்களை கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறுகின்றனர்.??

ஒரு பாட்டில் விற்றால் குறைந்தது 30 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. தினமும் 50 பாட்டில் விற்பனை செய்தாலே போதும், மாதம் 4ஆயிரத்து 500ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே ஒவ்வொரு கிராமத்திலும் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்கள் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை கைது செய்யும் காவல்துறையினர், ஓரிரு பாட்டில்களை மட்டும் கணக்கு காட்டி வழக்கு பதிவு செய்து விட்டு, ஸ்டேஷன் ஜாமீனில் விட்டு விடுகின்றனர். பின்னர் இவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று 6 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி வழக்கினை முடித்து விடலாம். தேனி மாவட்டத்தில் 2 மதுவிலக்கு காவல் நிலையம் உட்பட 33 காவல் நிலையங்களிலும் தினமும் குறைந்தது 10 பேரையாவது கைது செய்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதால் இவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று வழக்கினை முடிக்கவில்லை. இதனால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பலநுாறு வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வழக்குகளை முடியுங்கள் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தற்போது இயல்பான பணிக்கு திரும்பி உள்ள காவல்துறையினர் ‛மதுவிற்பனையில் கைதாகி ஸ்டேஷன் ஜாமீனில் வெளியில் இருப்பவர்களுக்கு போன் செய்கின்றனர். ஆனால் போலீஸ் நம்பர் என்பது தெரிந்தாலே மது விற்பவர்கள் போனை எடுப்பதில்லை.

விடாமல் பலமுறை போன் செய்தாலும், எப்போதாவது ஒருமுறை போன் அழைப்பினை எடுக்கும் அவர்களிடம், ‛யப்பா, கோர்ட்டுக்கு வந்து கேச முடிச்சுக் கொடுப்பா’ என காவலர்கள் கெஞ்சுகின்றனர். அதற்கு அவர்கள் ‛சார், எனக்கு ஒரு வாரம் வேலையிருக்கு. அடுத்த வாரம் பார்ப்போம்’ என கூறி விட்டு இணைப்பினை துண்டித்து விடுகின்றனர். அடுத்து அவர்களை தேடிப்பிடித்து வழக்கினை முடிக்கும் முன்னர் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு விடுகின்றனர்.

இது குறித்து காவலர் ஒருவர் கூறியதாவது: அனுமதியின்றி மது விற்பவர்கள் கள்ளச்சாராயம், விஷ சாராயம் விற்றால் சிறையில் அடைத்து கடும் தண்டனை வாங்கி கொடுத்து விடுவோம். ஆனால் அவர்கள் டாஸ்மாக் கடைகளில் வாங்கிச் சென்று மறுவிற்பனை செய்கின்றனர். இந்த குற்றத்திற்கு ‛ஸ்டேஷன் ஜாமீன், நீதிமன்றத்தில் 6 ஆயிரம் அபராதம்’ மட்டுமே விதிக்க முடியும். இது விற்பனை செய்பவர்களுக்கும் தெரியும்.

ஆனால் ஒரே நபர் பலமுறை நீதிமன்றத்திற்கு வந்தால் அவர்களை நீதிபதி தண்டித்து விடுவார். இதனால் அனுமதியின்றி மது விற்கும் வழக்கில் சிக்குபவர்கள் நீதிமன்றத்திற்கு வர மறுக்கின்றனர். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை போல், தினமும் குறிப்பிட்ட சிலரை கைது செய்ய வேண்டும்’ என எங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கின்றனர். உயர் அதிகாரிகள் ஒரே நிமிடத்தில் தீர்க்க கூடிய இந்த பிரச்னையில் ஒட்டுமொத்த காவல்துறையினரையும் பாடாய் படுத்தி எடுக்கின்றனர்’ என புலம்பினார்.

Tags

Next Story