கண்ணகி கோயில் சித்திரை திருவிழா குறித்து கேரளா முடிவு : விவசாயிகள் கொந்தளிப்பு

கண்ணகி கோயில் சித்திரை திருவிழா குறித்து   கேரளா முடிவு : விவசாயிகள் கொந்தளிப்பு
X

கண்ணகி கோயில் வளாகத்தில் பக்தர்கள் (பைல் படம்)

கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவினை கொண்டாடுவது தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் முடிவு எடுக்க கூடாது என வைகை பெரியாறு பாசன சங்க விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்ணகி கோயில் சித்திரை திருவிழாவினை கொண்டாடுவது தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் முடிவு எடுக்க கூடாது என வைகை பெரியாறு பாசன சங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறுகையில், :

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா தொடர்பாக, முடிவெடுக்க வேண்டியது தமிழக அரசு தானே தவிர, இடுக்கி மாவட்ட ஆட்சியர் அல்ல. முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்கிற மலையாள அரசின் தந்திரங்கள் பலத்த அடி வாங்கியதற்கு பின்னால், மெல்ல மெல்ல கண்ணகி கோயிலின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகிறது கேரள மாநில அரசு.

மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்திருக்கும் வண்ணாத்திப் பாறை வனப்பகுதி, தமிழக அரசுக்கு சொந்தமான வனப்பகுதி என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள். மேலாக காலங்காலமாக தமிழர்களின் பண்பாட்டுத் தொட்டிலாக விளங்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்திருக்கும் பகுதியை, எந்த நிலையிலும், எந்தக் காரணத்தை கொண்டும், கேரளா கபளீகரம் செய்வதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்கிற நிலைப்பாட்டில், கோடிக்கணக்கான கண்ணகி பக்தர்கள் உறுதியாக உள்ளனர்.


இந்த நிலையில், திடீரென முளைத்த ஒரு மலையாள அமைப்பு, சித்ரா பௌர்ணமி தினமான மே 5 ம் தேதியைத் தவிர்த்து, 6 ம் தேதி தான் கண்ணகி கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்று இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு சம்பந்தமே இல்லாமல் அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது. அரைவேக்காட்டுத்தனமான இந்த முன்மொழிவை தேனி மாவட்ட ஆட்சியருக்கு வழிமொழிந்திருக்கிறார் இடுக்கி மாவட்ட ஆட்சியர்.

இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? சிலப்பதிகாரமே உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று புலவர் கோவிந்தராசனாரால் நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையில்... மங்கலதேவி கண்ணகிக்கு உகந்த நாளான சித்ரா பௌர்ணமியை தவிர்த்து விட்டு, மறுநாள் தான் அந்த திருவிழாவை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு அரைவேக்காட்டு மலையாளிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?

நேற்று வரை இரண்டு மாநிலங்களும் கொண்டாடி வாழ்ந்த சித்ரா பௌர்ணமி நாளை, இன்று நாம் தனித்து கொண்டாட இருக்கும் நிலையில், அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாட இருக்கும் நிலையில், எங்கிருந்து இந்த அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார் இடுக்கி மாவட்ட ஆட்சியர்?

இதில் சம்பந்தமே இல்லாமல் கண்ணகி கோயிலில் உரிமை கொண்டாடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அறக்கட்டளை, இரண்டு மாவட்ட ஆட்சியர்களின் கூட்டுக் கூட்டத்தை தேக்கடியில் நடத்தக்கூடாது, கம்பத்தில் தான் நடத்த வேண்டும் என்று அறிக்கை கொடுத்திருப்பது நகைச்சுவையில் உச்சம்.

இந்த அறக்கட்டளை தான் கேரளாக்காரன் கோயிலை கட்ட வேண்டும் என்று எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் நிலுவையில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த தைரியத்தில் தான் இன்றைக்கு கேரளாவில் உள்ள சின்ன சின்ன அமைப்புகள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி நிகழ்வுக்கு வருகை தந்து, மங்கலதேவி கண்ணகியின் அருளைப் பெற வேண்டும் என்று அழைக்கிறோம். கூடுதலாக மங்கலதேவி கண்ணகி கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்கிற அறிவிப்பையும், அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட நபர்களுக்கோ, தனிப்பட்ட அறக்கட்டளைகளுக்கோ சித்ரா பௌர்ணமி நிகழ்வில் முக்கியத்துவம் இருக்குமானால், அதை எதிர்த்து கண்டிப்பாக களத்தில் நின்று போராடுவோம். பழனி மலை கோயிலுக்கு செல்வதற்காக அரசு அமைத்திருக்கும் ரோப் கார் வசதியை மங்கல தேவி கண்ணகி கோயிலிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல் பளியங்குடி, தெல்லுகுடி வழியாக வனத்துறையின் ஒப்புதலோடு ஏற்கனவே திட்டமிடப்பட்ட சாலைப் பணிகளை, இப்போது தொடங்கினாலே மண் சாலையாக மாற்றி விடக் கூடிய அவகாசம் இருப்பதால், அதிலும் கவனம் செலுத்த வேண்டும். என்று கூறியுள்ளார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்