விஜயகாந்துக்காக திருமணமே செய்து கொள்ளாமல் மறைந்த இப்ராகிம் ராவுத்தர்
இப்ராகிம் ராவுத்தருடன் விஜயகாந்த்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் விஜயகாந்த் என்றவுடன் இப்ராஹிம் ராவுத்தர் என்ற பெயரையும் நாம் கேட்டிருப்போம். விஜயகாந்த்- ராவுத்தர் இடையேயான நட்பு குறித்து பல பேர் அறிந்த விஷயமே. ஆனாலும் விஜயகாந்த் உயிரிழந்தது முதல் இப்ராஹிம் ராவுத்தர் என்ற பெயரை சிலர் கேட்டிருப்பார்கள்.. யார் அவர்..?
மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு சென்னை புறப்பட்ட விஜயகாந்திற்கு உறுதுணையாகவும் முழு பலமாகவும் இருந்தவர் தான் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். மதுரையை பூர்வீகமாக கொண்ட இருவருமே சிறு வயதிலிருந்து நெருங்கிய நண்பர்கள்.
உயிர் நண்பன் ராவுத்தர் விஜயகாந்தின் சினிமா கனவு நனவாக அவருடன் சென்னை கிளம்பினார். சினிமா வாய்ப்பு தேடி ஆரம்பத்தில் அலைந்த விஜயகாந்த் நிறைய அவமானங்களை சந்தித்தார்.
அப்போது விஜயகாந்திற்கு ஆறுதல் கூறியதோடு, அவரை திட்டியவர்களையும் தேடிச்சென்று சண்டையும் போட்டுள்ளார் ராவுத்தர். விஜயகாந்த் சில படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த நேரத்தில், அவருக்காக 'ராவுத்தர் பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தையும் தனியாக ஆரம்பித்தார் ராவுத்தர். அதில் விஜயகாந்தை நடிக்க வைத்து பல ஹிட் படங்களையும் கொடுத்தார். மேலும், விஜயகாந்த் மீது மிகுந்த பாசம் கொண்டதால், தனக்கு வரும் மனைவி நட்பை பிரித்து விடுவார்களோ என்று நினைத்த ராவுத்தர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இறுதியில் விஜயகாந்தின் சில அரசியல் முடிவுகள் இப்ராஹிம் ராவுத்தருக்கு பிடிக்காமல் போனதால், அவர்கள் நட்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் ராவுத்தர் மறைந்த பின்னர் அவரது இல்லம் சென்ற விஜயகாந்த் சிறு குழந்தையைப் போல ’’ டேய் ராவுத்தா நான் விஜி வந்துருக்கேண்டா.... கண்ண திறந்து பாருடா’’ என கதறி அழுதது அனைவரையும் கண் கலங்கச் செய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu