ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்துக்கொண்டே அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கும் பெண்

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்துக்கொண்டே அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கும் பெண்
X

கூடலுார் நகராட்சி பதினாறாவது வார்டு அ.தி.மு..க, வேட்பாளர் பா.லோகநாயகி.

கூடலுார் நகராட்சியில் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்துக் கொண்டே பா.லோகநாயகி என்பவர் 16வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.

தேனி மாவட்டம், கூடலுார் நகராட்சி 16வது வார்டில் வசிப்பவர் பாண்டியராஜன். மிகவும் பாரம்பரியமான பெருமைகளை பெற்ற குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டனர். தாங்கள் வாழும் பகுதியில் இவர் செய்துள்ள சமூக சேவைகளை பட்டியலிட்டால், பல பக்கங்களுக்கு எழுத வேண்டியிருக்கும்.

தற்போது பாண்டியராஜன் தேனி மாவட்ட அ.தி.மு.க.,வின் வர்த்தக அணி மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் பா.லோகநாயகி பி.டெக், எம்.பி.ஏ., பட்டதாரி ஆவார். ஹைச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தான் வசிக்கும் 16வது வார்டில் பாண்டியராஜன் தனது மகள் பா.லோகநாயகியை இரட்டை இலை சின்னத்தில் களம் இறக்கியுள்ளார். கூடலுார் நகராட்சி தலைவராக பதவி வகித்த, தற்போது கூடலுார் அ.தி.மு.க., நகர செயலாளராக இருக்கும் என்.எஸ்.கே.கே.ஆர்.அருண்குமார் தான் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசி, 16வது வார்டிற்கு அ.தி.மு.க.,வின் வேட்பாளராக பா.லோகநாயகியை களம் இறக்குவது தான் சிறந்தது என பரிந்துரை செய்துள்ளார்.

கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் வரை பாண்டியராஜனுக்கு மிகுந்த நற்பெயரும், நல்ல தொடர்புகளும் உள்ளது. தவிர அவர் குடியிருக்கும் 16வது வார்டிலும் அவரது குடும்பத்திற்கும், அவருக்கும் மிகச்சிறந்த நற்பெயரும் உள்ளது. பாண்டியராஜன் அரசியலில் மிகுந்த அனுபவம் பெற்றவர். தேர்தல் பணிகளை திட்டமிட்டு முடிப்பதில் கை தேர்ந்தவர். பலமுறை இப்பகுதியில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு அதிகளவு ஓட்டுக்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

எனவே கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால், பா.லோகநாயகி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்துக் கொண்டே தற்போது அ.தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இன்று இறுதிப்பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் பா.லோகநாயகிக்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

லோகநாயகி தற்போது தனது தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்து வருகிறார். நாளை அவர் தனது வாக்குறுதிகளை வெளியிட உள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது