குரங்கணி வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகள் வேட்டை..!?
குரங்கணி மலைப்பகுதி.(கோப்பு படம்)
தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதி மிகவும் அடர்ந்து வளர்ந்துள்ள செழிப்பான வனப்பகுதி ஆகும். இங்கு சிறுத்தை, மிளா, கேழையாடு, சருகுமான், செந்நாய், காட்டுமாடுகள் அதிகம் உள்ளன.
இங்குள்ள சிலர் கள்ளத்துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இந்த பகுதியில் இதுவரை 16க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் இருக்கலாம் என போலீசாரே கருதுகின்றனர். இந்த துப்பாக்கிகள் மூலம் வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.100 கிலோவிற்கு குறைந்த எடை கொண்ட சருகுமான், மிளா, கேழையாடு, காட்டுமாடுகள் தான் வேட்டைக்காரர்களின் இலக்காக உள்ளது.
இப்படிப்பட்ட விலங்குகளை வேட்டையாடினால் அடித்து மாமிசத்தை கொண்டு வருவதும், பகிர்வதும் எளிது. சில நேரங்களில் வேட்டைக்காரர்களுடன் முக்கிய பொறுப்பு வகிக்கும் சில சீருடை கீழ்நிலை பணியாளர்களும் பங்கு வாங்கி, மது அருந்தி விட்டு, இந்த இறைச்சியை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
தவிர குரங்கணி வனப்பகுதியில் பட்டா காடுகளும், வனக்காடுகளும் அடுத்தடுத்து, இருப்பதால் உள்ளே ஆட்கள் சென்று வருவதை தடுக்க வழியில்லை. இதுவே வேட்டைக்காரர்களுக்கு வசதியாக போய் விடுகிறது. இங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் யார், யார் சென்று வருகிறார்கள் என்ற விவரம் மட்டுமே பதிவாகும்.
வேட்டை வனத்திற்குள் நடப்பதால், சென்றவர்களில் யார் வேட்டையாடுகின்றனர் என்பது தெரியவருவதில்லை. இதுவும் வேட்டைக்காரர்களுக்கு சாதகமாக போய் விடுகிறது. இந்த வேட்டையால் ஏராளமான விலங்குகள் அழிக்கப்பட்டு வருகின்றன. மீதம் உயிர்தப்பிய விலங்குகள் பேரீச்சம், கொடைக்கானல் வனப்பகுதிக்கு தப்பிச் சென்ற விட்டன. இதனால் குரங்கனி பகுதியில் உயிரின சமநிலை சூழல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது என வனஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
குரங்கணி வனப்பகுதியில் எங்களுக்கும் அதிகளவில் இன்ஃபார்மர்கள் உள்ளனர். இவர்கள் அங்கு எது நடந்தாலும் எங்களுக்குத் தெரிவித்து விடுவார்கள். எனவே வேட்டை நடப்பதாக எங்களுக்கு இதுவரை தகவல் இல்லை. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழாக்காலங்களில் வனவிலங்குகள் வேட்டையை தடுக்க சிறப்புக்குழு அமைப்போம்.
அதேபோல் இந்த ஆண்டும் அமைத்துள்ளோம். இப்போது புதியதாக கள்ளத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடப்படுவதாக புகார் கிளம்பியதால், ரகசிய குழு ஒன்றை நியமித்து கண்காணித்து வருகிறோம். இந்த குழுவின் உறுப்பினர் யார் என்பது என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்த அளவு ரகசியமாக கண்காணிப்பு பணி நடக்கிறது.
கீழ் நிலை சீருடை பணியார்கள் வேட்டைக்காரர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும், வேட்டைக்காரர்களிடம் மாமிசம் வாங்கி சாப்பிடுவதாகவும் எழுப்பப்படும் புகாரை ஏற்க முடியாது. எங்களது வனப்பணியாளர்களுக்கு நாங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இவ்வாறு கூறினார்.
பாதுகாப்பது நமது கடமை
எது எப்படி இருந்தாலும் நமது தமிழக பகுதியில் வாழும் வனவிலங்குகளை காப்பது நமது கடமை என்பதை இப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். உயிரின சமநிலை பாதிக்கப்பட்டால் மனித சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை இவர்கள் உணரவேண்டும்.
கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்போர் விபரங்களைத் திரட்டி காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்ல, இந்த புவியில் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கான உரிமை உண்டு என்பதை மனிதன் உணரவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu