கண்ணகி கோயில் விழாவிற்கு செல்லவிடாமல் தடுத்தால் உண்ணாவிரதம்
தேனி மாவட்டத்தில் கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் மே 5ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலரை கலந்து கொள்ள வேண்டாம் என உளவுப்பிரிவு மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கூடலுார் காவல் ஆய்வாளர் பிச்சைப்பாண்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யுமாறு மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும், கைது செய்ய ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டார்.
ஆனால் எதற்காக எங்களை கைது செய்கிறீர்கள். நான் என்ன பயங்கரவாதியா? அல்லது தீவிரவாதியா? இந்த ஆண்டு கண்ணகி கோயில் விழாவில் தமிழக உரிமைகள் பற்றி எதுவுமே பேச மாட்டோம். இந்த விவகாரங்களை விழா முடிந்த பின்னர் சட்டரீதியாகவோ, தமிழக அரசு மூலமாகவோ அணுகி எங்கள் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்றுக் கொள்வோம் என கூறி விட்டோமே என பதிலளித்தேன்.
நீங்கள் விழாவிற்கே வரக்கூடாது. வந்தால் தேவையில்லாத பிரச்னை உருவாகுமே என்பதால் தான் கைது செய்யப்போகிறோம் என காவல் ஆய்வாளர்கூறினார். அப்போது அப்படி என்னை கைது செய்தால், ‘உடனே உண்ணாவிரதம் தொடங்குவேன். பச்சைத்தண்ணீர் கூட குடிக்காமல் பல நாட்கள் என்னால் இருக்க முடியும். எனக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு ஏதாவது நிகழ்ந்தால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். எந்த காரணமும் இன்றி சிலரது துாண்டுதலின் பேரில், (அந்த சிலர் யார் எனக்கூட என்னால் கூற முடியும்) எங்களை கைது செய்தால் நிச்சயம் அடுத்த நொடியே உண்ணாவிரதம் தொடங்கி விடுவேன் எனக் கூறினேன்.
அதன் பின்னர் நான் மேலிடத்தில் பேசி விட்டு கூறுகிறேன் எனக்கூறி காவல் ஆய்வாளர்அமைதி காத்து வருகிறார். நிச்சயம் எங்களை கோயிலுக்கு அனுமதிக்கும் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. தமிழனாக பிறந்து கண்ணகியை வழிபடக்கூட உரிமை இல்லாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும். என்று கூறினார்.
ஏற்கனவே அரிசிக்கொம்பன் யானை பிரச்னையில் கேரள மாநில பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் கேரள அரசை வறுத்தெடுத்து வருகின்றன. தமிழகத்தில் பெரியாறு பாசன விவசாயிகள் எடுத்துள்ள நிலைப்பாடு இந்த ஆண்டு விழாவில் பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu