முல்லை பெரியாறு அணையை மீட்கும் வழி: அமைச்சரிடம் முறையிட்ட தமிழக விவசாயிகள்
முல்லை பெரியாறு அணையில் தமிழக அமைச்சர் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
கேரள அரசின் அராஜகத்தின் பிடியில் இருந்து முல்லை பெரியாறு அணையினை மீட்டு, தமிழக விவசாயிகளை காப்பாற்ற என்ன தமிழக அரசு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கினர்.
அந்த கடிதத்தை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளோம்.
அனுப்புதல்
எஸ்.ராசசேகர். (எஸ். ஆர். தேவர்)
தலைவர்
ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
பெறுதல்
மாண்புமிகு நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
பொருள்-முல்லைப் பெரியாறு அணையில் கழக அரசு செய்ய வேண்டிய சில வேலைகள் குறித்தான எங்களுடைய வேண்டுகோள்கள்..
ஐயா வணக்கம்
முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே தெளிவான சித்திரத்தை உள்வாங்கி இருக்கும் தாங்களுக்கு, ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பில் சில வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்.
*1-பெரியாறு அணைக்கு நீர் வரும் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்வதற்கு விரிவான ஏற்பாடு செய்ய வேண்டும்*
*2-அணையை அடுத்து இருக்கும் முல்லைக்கொடியில் அமைந்துள்ள மழைமானி, அணைப் பகுதியிலுள்ள பொறியியாளர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்
*3-பெரியாறு அணை முழுவதும் கேரள காவல் துறையின் பாதுகாப்பில் இருப்பது அத்தனை உசிதமாக இல்லை. மாறாக கேரள மாநில அரசுடன் பேசி 50 விழுக்காடு தமிழக காவலர்களும், 50 விழுக்காடு கேரள காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சியை தாங்கள் முன்னெடுக்க வேண்டும்
*4-உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசால் முன்மொழியப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு என்பது குறித்தும் தாங்கள் அக்கறை செலுத்துவீர்கள் என்று நம்புகிறோம்
*5-மாதம் இருமுறை மதிப்பிற்குரிய தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அணைக்குச் சென்று பார்வையிட்டு வரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்
*6-பெரியாறு அணைப் பகுதியில் செயல்படவேண்டிய பொதுப்பணித்துறை அலுவலகங்கள் கம்பத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது. அணை சார்ந்த அத்தனை அலுவலகங்களும் உடனடியாக அணைப் பகுதிக்கு மாற்றித் தருவதற்கு தாங்கள் முன்வர வேண்டும்
*7-பாதுகாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குள் நுழைவது எவராக இருந்தாலும், அவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதியை பெற வேண்டும் என்கிற நடத்தை விதி முறைகள் உருவாக்கப்பட வேண்டும்*
*8-பேபி அணையை பராமரிப்பதற்கு இடையூறாக இருக்கும் இருபத்திமூன்று மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதியை கேரள மாநில அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்
*9-நீண்ட காலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் தமிழன்னை படகை, அணைக்கு சென்று வருவதற்கான போக்குவரத்திற்கு பயன்படுத்திட கேரள அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும்
*10-பெரியாறு அணையில் பணிபுரியும் தமிழக பொறியாளர்கள் வல்லக்கடவு வன சோதனைச்சாவடி வழியாக எவ்வித நிறுத்தமும் இன்றி சென்று வருவதற்கு, இணக்கமான ஒரு சூழலை கேரள மாநில அரசுடன் ஏற்படுத்த வேண்டும்*
*11-2006 மற்றும் 2014 ஆகிய உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
*12-கிடப்பு நீராக உள்ள 104 அடியில்,50 வது அடியில் ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியே கொண்டு வருவதற்கான சுரங்கம் அமைப்பதற்கு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
*13-தேக்கடியில் தமிழக பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு முன்பாக, பெரியாறு புலிகள் காப்பகம் அமைத்துள்ள வனச் சோதனைச் சாவடியை, நமது பொதுப்பணித் துறை அலுவலகங்களை தாண்டி அமைக்குமாறு அறிவுறுத்த வேண்டும்
*14-குமுளியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளின் கழிவுநீர், பெரியாறு நீரோடு நேரடியாக கலப்பதை தடுத்து நிறுத்தி ஒழுங்கு செய்ய ஆவண செய்ய வேண்டும்
*5-முல்லைப் பெரியாறு அணை குறித்து விஷமப் பிரச்சாரம் செய்யும் கேரள இணையவாசிகள் மீது அந்த மாநில முதல்வர் அறிவித்தபடி சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும்
*16-முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால், ஏற்கனவே 1979 முதல் இன்றுவரை விடுபட்டு கிடக்கும் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசனப் பகுதிகள் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பயன்பெறும்
*17-வைகை அணையின் மொத்தமுள்ள 70 அடி கொள்ளளவில், 30 அடி உயரத்திற்கு தேங்கிக் கிடக்கும், சேறையும் சகதியையும் அப்புறப்படுத்தி தூர் வாருவதற்கு நமது அரசு முன்வரும் என்று நம்புகிறோம்
*18-அணைப்பகுதியில் கண்டிப்பாக வருகைப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்
*19-அணைப்பகுதியில் பணிசெய்யும் தமிழக பொறியாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்
*20-தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீர்ப்பை வழங்கும் இக்கட்டான நிலை உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்படுகிறது.அதை மாற்றி 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே தொடர்ந்து நடைமுறையில் இருக்குமாறு ஒரு ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய வேண்டும்
இவற்றோடு இன்னும் கூடுதலாக, மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தாங்கள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது, முல்லைப் பெரியாறு அணைக்கு வந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
நன்றி
எஸ்.ராசசேகர் (எஸ் ஆர் தேவர்), தலைவர், ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu