'மலையாள தேசம்' ஆகப்போகிறதா நீலகிரி மாவட்டம், கூடலுார் தாலுகா..?!
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பளர் ச.அன்வர்பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளருமான ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:
கர்நாடகத்தோடும், கேரளாவோடும் எல்லையை பகிர்ந்து கொள்ளும் கூடலூர் தாலுகா, இதமான காலநிலை கொண்ட ஒரு மலை வாசஸ்தலம். செருமுள்ளி 1 மற்றும் 2, முதுமலை, நெல்லகோட்டை, ஸ்ரீ மதுரை, தேவாலா 1 மற்றும் 2, கூடலூர் 1 மற்றும் 2, ஒவேலி 1 மற்றும் 2, பாடாந்துறை 1 மற்றும் 2, ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுகாவில் தான், உலகப் பிரசித்தி பெற்ற மசினகுடியும் வருகிறது.
மலை வளத்திற்கும், வன வளத்திற்கும் புகழ்பெற்ற இந்த தாலுகாவில், கடந்த 50 ஆண்டு காலமாகவே அருகாமையில் உள்ள சுல்தான் பத்தேரி, நிலம்பூர், கோழிக்கோடு, கல்பெற்றா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்த மலையாளிகள், இன்று அந்த தாலுகாவில் மொத்த மக்கள் தொகையில் 46.09 விழுக்காடு வசித்து வருகிறார்கள். தமிழர்களின் எண்ணிக்கை 38.08 விழுக்காடு ஆக குறைந்து காணப்படுகிறது. கன்னடர்களின் எண்ணிக்கை 8. 08 விழுக்காடாக இருக்கிறது. பணியா கும்பல் 3,230 பேரும், குரும்பர்கள் 1,679 பேரும், படுகர்கள் 784 பேரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த விழுக்காடு எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. எதை நோக்கி தமிழகம் செல்கிறது என்று நினைத்து பார்த்தால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகவும் இருக்கிறது.சிரபுஞ்சிக்கு அடுத்து உலகத்தில் அதிக மழைப்பொழிவு உள்ள இடமான தேவாலா இந்த தாலுகாவில் தான் வருகிறது. ஒரு காலத்தில் நிலம்பூர் ஜமீனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த கூடலூர் தாலுகா, பிரிட்டிஷ்காரன் காலத்திலேயே தமிழகத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.
வயநாடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அறியப்பட்ட இந்த கூடலூர் தாலுகாவில், ஆதித்தமிழர்களோடு, 1964 இல் இலங்கை அதிபரான சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும்-லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை மலையகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்கள் ஒரு லட்சம் தமிழர்களுமாக பெரும்பான்மையாக இருந்த இந்த கூடலூர். அதற்குப் பிறகு எப்படி மலையாள மயமானது என்று நமக்கு தெரியவில்லை.
1964 இல் அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த பக்தவச்சலம் தலைமையிலான அரசு, நீலகிரி மாவட்டம் முழுவதும் இருக்கும்,பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா வழங்க முன் வந்தது. பெரிய அளவிற்கு விழிப்புணர்வற்ற தமிழ் சமூகம், அந்த பட்டா வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளாத நிலையில், அந்தச் சலுகையை கூடலூர் தாலுகாவில் மலையாளிகளும், ஒட்டுமொத்தமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர்களும் பெருமளவு கைப்பற்றினர்.
அப்போதுதான் அந்த மாவட்டத்தில் குடியேறிய இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அதில் எந்த சலுகையும் இல்லாததால் அவர்கள் தனித்து விடப்பட்டார்கள். கூடுதலாக இலங்கையில் இருந்து வரும் தாயகம் திரும்பும் தமிழர்களை நீலகிரி மாவட்டத்தில் குடியேற்றக்கூடாது என்றும் படுகர்கள் களத்தில் இறங்கி போராடினார்கள்.
அதற்குத் தோதுவாக கூடலூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர்களாக இருந்த தமிழர் அல்லாத பொம்மன், மூன்று முறை தொடர்ச்சியாக அங்கு வெற்றி பெற்ற படுக இனத்தைச் சேர்ந்த ஹட்சி கவுடர், மலையாளி ஆன எம்.கே. கரீம் ஆகியோரின் ஆதரவோடு அந்தப் போராட்டம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
விழிப்புணர்வற்ற தமிழர்கள் தங்களுக்கு அரசு உருவாக்கித் தந்த தேயிலை தோட்டத்திலேயே தங்களுடைய வாழ்வை கழித்துக் கொண்டிருந்ததன் விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக கோழிக்கோடு, நிலம்பூர் பகுதிகளிலிருந்து, கூடலூர் தாலுகாவில் உள்ள நாடுகாணி வழியாக, கூடலூர் தாலுகாவிற்குள் குடியேற ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்கு தோதாக இன்னொரு வழியும் கேரளாவிலிருந்து கூடலூரை இணைத்தது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி பகுதியில் உள்ள மலையாளிகள், தாளூர், எருமாடு பந்தலூர் வழியாக கூடலூர் தாலுகாவிற்குள் புக ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட தமிழக-கேரள எல்லையான தாளூரில் ஆரம்பிக்கும் அவர்களுடைய நில ஆக்கிரமிப்பு, அங்கிருந்து எருமாடு, சேரம்பாடி, பந்தலூர், தேவாலா, நாடுகாணி வழியாக கூடலூர் வரை பரந்து விரிந்தது.
கூடலூர் நகர வர்த்தகத்தின் எண்பது விழுக்காடு மலையாளிகள் வசம் சென்று விட்ட நிலையில், வெறும் 20 விழுக்காடு தமிழர்கள் மட்டுமே பல்வேறு நெருக்கடிகளுக்குள் கூடலூரில் தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வ சாதாரணமாக மலையாளத்தில் கூடலூர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது.
கூடலூரில் உள்ள உணவகங்களில், மலையாளத்தில் மட்டுமே விலை பட்டியல் தொங்க விடப்பட்டிருக்கிறது. அந்த தாலுகாவின் பிரதான பேசு மொழியாக மலையாளம் என்று கொக்கரிக்கிறது விக்கிபீடியா. தேக்கு, கருங்காலி, மருது என்று அடர்ந்து கிடக்கும் காட்டு மரங்களை எல்லாம், சஜீவன் போன்ற அதிமுக ஆதரவு பெற்ற மலையாளிகள், அறுத்து குவித்து, கோடிகளிலே வலம் வருகிறார்கள்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திராவிட மணியும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொன். ஜெயசீலனும், தொகுதி தனித்தொகுதியாக ஆனதால் மட்டுமே அங்கு சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
தொகுதி, பொதுத்தொகுதியானால் கண்டிப்பாக அங்கு ஒரு மலையாளி மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற இக்கட்டான சூழல் நன்றாகவே உருவாகி இருக்கிறது.
ஒரே ஒரு நாடார் திருமண மண்டபம் மட்டும், தமிழர்களின் அடையாளமாக கூடலூரில் நின்று கொண்டிருக்கிறது. கூடலூர் நகரில் பிரசித்தி பெற்ற சாஸ்தாபுரி தங்கும் விடுதி ஒரு மலையாளிக்கு சொந்தமானது. மலையகத் தமிழர்களை மட்டும் தமிழக அரசாங்கம் அங்கு குடியேற்ற வில்லை என்றால், இன்றைக்கு அது கேரளாவோடு இணைக்கப்பட்டு இருக்குமோ என்கிற அச்சமும் எழுகிறது. அந்த அளவிற்கு கூடலூர் தாலுகாவோடு பின்னி பிணைந்து கிடக்கிறார்கள் மலையாள சகோதரர்கள்.
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமும் இழுத்து மூடப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், அதை நம்பி இருந்த மலையகத் தமிழர்கள் வாழ்வும் கேள்விக்குறியாகி இருக்கிறது. மலையாளிகளோடு மார்வாடிகளும், கூடலூர் தாலுகாவில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தங்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள்.
அரசின் கைவசம் இருக்கும் ஜன்ம பூமியை எப்படியாவது கைப்பற்றி விட மார்வாடிகளும், மலையாளிகளும் முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த ஜென்ம பூமியையும், நிலம்பூர் ஜமீன்தாரிடமிருந்து, ஜமீன்தார் ஒழிப்பு முறையில் தமிழக அரசால் கைப்பற்றப்பட்ட 85 ஆயிரம் ஏக்கரில், ஒரு 25,000 ஏக்கரையும் கையகப்படுத்தி, கூடலூர் தாலுகாவில் நிலமற்ற பூர்வகுடி தமிழர்களுக்கும், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கும், மூன்று ஏக்கர் அளவில் தமிழக அரசு பிரித்துக் கொடுத்து அந்த நிலத்தை ஒழுங்குபடுத்தாவிட்டால், விரைவில் கூடலூர் தாலுகாவை கேரளாவோடு இணைக்கச் சொல்லி போராட்டம் வெடித்தாலும் வெடிக்கலாம்.
தங்கு தடையின்றி நாடுகாணி வழியாக கூடலூரில் இருந்து நிலம்பூர் செல்லும் சாலையில், தமிழக காவல்துறை தீவிர வாகன சோதனையை மேற்கொள்ள வேண்டும். அதுபோல கூடலூரில் இருந்து தெப்பக்காடு வழியாக முதுமலை சென்று அங்கிருந்து பந்திப்பூர் சரணாலயம் வழியாக குண்டல்பேட், மைசூர் செல்லும் சாலையிலும், உரிய தடுப்பரன்கள் அமைத்து தமிழக காவல்துறை கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக கூடலூரில் இருந்து தேவாலா பந்தலூர் சேரம்பாடி எருமாடு தாளூர் வழியாக சுல்தான்பத்தேரி செல்லும் சாலையிலும் போக்குவரத்தை தமிழக காவல்துறை கடுமையாக கண்காணிக்க வேண்டும். காரணம் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைபவர்கள். இந்த தாளூர் கூடலூர் சாலையில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளில் தங்கி கொண்டு தான், எல்லா நில ஆக்ரமிப்பு வேலைகளையும் செய்து வருகிறார்கள்.
கூடுதலாக தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை, நில அளவைத்துறை, காவல்துறை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து, ஒரு சிறப்பு குழுவை அமைத்து,கடந்த 50 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து, நிலத்தை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும். இது குறித்த ஒழுங்குபடுத்ததலுக்கான முதல் கூட்டத்தை விரைவில் கூடலூரில் நடத்துவோம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu