தேனி அரிசிக்கு சென்னையில் வரவேற்பு
ராஜபோகம் அரிசி
தேனி மார்க்கெட்டில் உள்ள அரிசி மில்களில் பக்குவப்படுத்தப்பட்ட ராஜபோகம் வகையினை சேர்ந்த தரமான அரிசிக்கு சென்னை மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தேனி மார்க்கெட்டில் இருந்து சென்னை வியாபாரிகள் அதிகளவு அரிசி கொள்முதல் செய்கின்றனர்.
சென்னை மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிகளவு அரிசி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சென்னை மார்க்கெட்டில் தேனி மாவட்ட அரிசியை விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
இது குறித்து தேனி மாவட்ட அரிசி வியாபாரிகள் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திராவில் அரிசியை பாதி அளவே வேக வைத்து அரைத்து பாலீஸ் செய்து விடுகின்றனர். இதனால் அரிசியில் உள்ள சத்துக்கள் வீணாக வெளியேறி விடுகிறது. இதனை ‛ஆப்பாயில்’ எனக்கூறுவார்கள். இதில் மாவுச்சத்து அதிகம் இருக்கும். இதனால் இந்த அரிசியில் சாதம் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு மள மளவென அதிகரிக்கும். தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில் அரிசியை முழுமையாக வேக வைத்து பக்குவப்படுத்தி அரைத்து தரமாக வழங்குகின்றனர். இதனால் ஆந்திரா, கர்நாடகா அரிசியை விட டெல்டா மாவட்டங்களில் விளையும் அரிசிக்கு சென்னை மக்கள் சிறப்பு முக்கியத்துவம் தருகின்றனர்.
ஆனால் தேனி மாவட்டத்தில் முற்றிலும் புதிய நடைமுறைகள் கையாளப்படுகின்றன. இங்கு நெல்லை ஓராண்டு, அல்லது ஒண்ணரை ஆண்டு வரை இருப்பு வைத்து, அதன் பின்னர் அந்த நெல்லை ஊற வைத்து முழுமையாக வேக வைத்து காயப்போடுகின்றனர். நன்கு காய்ந்த நெல்லை மீண்டும் ஊற வைத்து வேக வைத்து காயப்போட்டு அதன் பின்னர் அரைக்கின்றனர். பெரும்பாலும் ராஜபோகம் வகை அரிசிகள் தமிழகம் முழுவதும் இதேபோல் தான் தயாரிக்கப் படுகின்றன.
ராஜபோகம் வகையினை சேர்ந்த அரிசியை தயாரிக்கும் முறையே இது தான். இந்த முறையில் தயாரிக்கப்படும் அரிசியில் நெல் உமியில் உள்ள சத்துக்களும் அரிசியுடன் சேர்ந்து கொள்ளும். அரிசியை பாலீஸ் செய்ய மாட்டோம். மட்டி கலரில் இந்த அரிசி இருக்கும். இதில் சத்துக்கள் முழுமையாக இருக்கும். இந்த அரிசியை வேக வைத்து வடித்து சாப்பிடும் போது, மிகவும் சுவையாகவும் இருக்கும், ஆந்திரா, கர்நாடகா அரிசியுடன் ஒப்பிடுகையில் இதன் சுவையும், தரமும் பல மடங்கு அதிகரிக்கிறது.
தவிர இதனை சாப்பிடும் போது உடலில் சர்க்கரை அளவும் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வேக வைத்து வடித்த அரிசியை சாப்பிடுங்கள் என்றே கூறுகிறோம். அரிசி வடித்த கஞ்சியை ஒரு நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை குடிக்கும் வழக்கமும் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மிக அதிகளவு இருக்கும். இதனால் உடல் நலத்திற்கு உகந்தது என்பதால் மக்கள் தேனி மாவட்டத்திற்கு விரும்பி வாங்குகின்றனர். பழைய அரிசியின் தேவை அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக அரிசி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu