நேர்மையான சமூக மாற்றத்திற்கு என்ன தேவை?.. பிரதமர், முதல்வருக்கு காவல் அதிகாரியின் திறந்த மடல்…

நேர்மையான சமூக மாற்றத்திற்கு என்ன தேவை?.. பிரதமர், முதல்வருக்கு காவல் அதிகாரியின் திறந்த மடல்…
X

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி விஜயன்.

நேர்மையான சமூக மாற்றத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மற்றும் முதல்வருக்கு தேனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி கடிதம் எழுதி உள்ளார்.

தேனி என்டிஆர் நகரைச் சேர்ந்தவர் விஜயன். இவர், காவல் துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பணியில் இருந்தபோது விருப்ப ஓய்வு பெற்றார். மேலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விஜயன் பேசி வருகிறார்.

இந்த நிலையில், மாணவ சமுதாயத்திற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்கு திறந்த மடல் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:

காவல்துறையில் ணியாற்றும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அப்போது, மாணவ, மாணவிகளிடம் நாட்டு நடப்பு பற்றிய கேள்விகள் கேட்பது உண்டு. ஆனால், யாரும் சரியாக பதில் கூறுவது கிடையாது.

ஒரு சிலர் அவர்களது பெற்றோர் பார்க்கும் பணிகளை பொறுத்து ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வது உண்டு.

காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கூட இந்த நிலை தான் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலருக்கும் இதுபற்றிய புரிதல் மிக குறைவாகவே இருக்கிறது.

என்னை பொறுத்தவரை ஓட்டுரிமை! ஓட்டுநர் உரிமை! திருமண உரிமை பெறும் முன் எல்லோருக்கும் அதற்கான புரிதலை கல்வித்துறையும், சமூக நலத்துறையும் தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், கல்வித்துறை சமூக நலத்துறை இரண்டும் காலத்தே பயிர் செய்யாமல் விடுவதால், தங்கள் வாழ்க்கையை நாட்டு நடப்பு பற்றிய விபரம் இல்லாமல் துவங்கும் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் எல்லோரும் பல்வேறு பாதிப்புக்களில் இளமை காலத்திலேயே மாட்டி கொள்கிறார்கள். அதன் பின் அதில் இருந்து அவர்கள் கடைசி வரை மீண்டு வர முடிவதில்லை.

எனவே, ஆரம்ப கல்வி, உயர்நிலை கல்வி, மேல்நிலை கல்வியில் இதற்காக ஒரு தலைப்பை மட்டுமாவது வைத்து அதற்கு என்று மதிப்பெண் வழங்கும் நடைமுறையை கொண்டு வர அதிகாரிகளுக்கு தாங்கள் இருவரும் உத்தரவிட்டால் நல்லது. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் கழிப்பிடம், சுத்தம், சுகாதாரம், விளையாட்டு என்பதே அபூர்வமாக இருக்கிறது. இயற்கை உந்துதலை செய்வதற்கு வாய்ப்பின்மை காரணமாக பல மாணவிகள் இளம் வயதிலேயே அல்சர் போன்ற நோய்களின் பிடியில் சிக்கி கொள்வதாக விபரம் அறிந்த பலர் தெரிவித்து வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் எல்லா வசதிகளும் இருந்தாலும் படிப்புக்கு மட்டுமே அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் விளையாட்டு திறன், பேச்சு திறன், ஓவியத் திறன், எழுத்து திறன் என்று எந்த தனித்திறனையும் வளர்த்து விட எந்த வியூகமும் இல்லை.

எனவே, விளையாட்டு உட்பட தனித்திறன் சார்ந்த பணிகளை கவனிக்க ஆர்வமுள்ள ஒருவரை தனி அமைச்சராக நியமிக்க வேண்டும். தமிழக அரசின் சமூக நலத்துறை வெறும் சத்துணவு முட்டை என்ற வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

தமிழகம் முழுவதும் நம் நாட்டு நடப்பு குறித்தும், கலப்பட உணவுகள் போன்ற பொது அறிவு பற்றிய தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய மாநிலம் முழுவதும் மாவட்ட உட்கோட்ட வாரியாக அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட நிரந்தர நடமாடும் குழுவை அமைக்க வேண்டும்.

நம்முடைய மக்களை எல்லாவற்றிலும் உடனே மாற்றுவது மிக கடினம். ஆனால் மாணவர்கள், இளைஞர்களை தவறான பாதையில் செல்லும் முன் காக்க தாங்கள் பிரதமரும், முதல்வரும் நினைத்தால் முடியும். அதற்கான வியூகத்தை இப்போதே ஆரம்பித்தால், மாற்றங்கள் மெல்ல மெல்ல உருவாக துவங்கி, அடுத்த தலைமுறையில் இருந்து நோயற்ற, குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் இல்லாத, ஏமாற்றம் இல்லாத, நேர்மையான சமூக மாற்றம் உருவாகி விடும்.

ஒவ்வொரு விசயத்திலும் மாணவ, மாணவிகளின் மூளை சரியாக வேலை செய்ய வேண்டும். எந்த விசயமாக இருந்தாலும் கூகுள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் அல்லது அடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று இருப்பது எதிர்பாராத சிக்கலை உருவாக்கி விடும்.

மாணவ, மாணவிகள் தங்களது கல்வி காலம் முடிந்து அரசு பணிக்கு அதிகாரிகளாக வரும்போது கூட, நாட்டு நடப்பு பற்றிய முழு புரிதல் இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. ஆங்கிலத்தில் பேசும் திறனும் பலருக்கு இல்லாமல் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் வலுவான, ஆரோக்கியமான, அறிவுப் பூர்வமான, மாணவ-மாணவிகளை உருவாக்க ஏதாவது ஒரு பாட புத்தகத்தில் இன்றைய நாட்டு நடப்பு என்ற பகுதியை வைத்து அதற்கு பத்து மதிப்பெண் மட்டும் கொடுத்தால் போதும். அதன் மூலம் எல்லோரும் பொது அறிவு விசயங்களை ஆர்வமுடன் படிக்கும் சூழல் உருவாகும். அந்த 10 மதிப்பெண் மிகப் பெரிய சமூக மாற்றங்களை நம் நாட்டில் உருவாக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என கடிதத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!