சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஸ்ரீமந் நாராயணன் வரலாறு தெரியுமா?
பெசன்ட் நகர் அஷ்டலக்ஸ்மி கோயில்.
முக்கூர் ஸ்ரீநிவாசவரதாச்சாரியார் ஒரு வைணவ பக்தர். மேலும் அவர் ஒரு உபன்யாசகருமாவார். வைணவராக இருந்தும் மஹாபெரியவாளிடம் பக்தி கொண்டவராக அடிக்கடி மகானைத் தரிசிக்கச் செல்வதுண்டு.
1970ம் ஆண்டு பெசன்ட் நகரில் இவர் இருந்த இடத்தில் எண்ணி நாலைந்து வீடுகள் தான் இருந்தன. இவர் ஒரு கோசாலை வைத்திருந்தார். ஒருமுறை உபன்யாசம் செய்ய மும்பை நகருக்கு சென்றபோது அங்கே அருளும் மஹாலட்சுமி கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கே ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்வதால் தான் செல்வம் பெருகுவதாகவும் இங்கே தெற்கே நிலபரப்பும் குறுகியிருக்க செல்வச் செழிப்பும் குறைவாக இருப்பதாக அவர் மனதில் தோன்றியுள்ளது.
மஹா பெரியவாளை அதற்குப்பின் தரிசித்தபோது முக்கூரார் தன் இந்த அபிப்ராயத்தை அத்தெய்வத்திடமே மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார். உடனே பெரியவா தெய்வ கட்டளையாக “ஏன் நீயே இங்கே ஒரு மஹாலட்சுமி கோயில் கட்டலாமே" என்றுள்ளார். இப்படி இவர் எதிர்பார்க்காத கட்டளை எழ இவர் திக்குமுக்காடிப் போனார்.
"நான் எப்படி பெரியவா அத்தனை பணத்துக்குப் போறது” என்று வெளிப்படையாகக் கேட்டு விட்டார். “ஏன் உன்னாலே கட்டமுடியாது? கும்பகோணம் சாரங்கபாணி கோயிலை யார் கட்டினான்னு நினைக்கிறே” என்று இவரைக் கேட்டு விட்டு பெரியவா அந்தக் கதையை விளக்கினார். அந்த கோயிலை ஒரு ஏழை பிராமணன் தான் கட்டியதாகவும், கையில் காசே இல்லாமல் யாசகம் செய்து தான் பணம் சேர்த்துக் கட்டியதாகவும் இவரிடம் பெரியவா விவரித்தார்.
"அதுபோல நீயும் கட்டலாம்" என்றார். இவரும் அத்திருப்பணிக்காக முதல் கட்டமாய் நிலத்தை தேடினார். பாற்கடலில் துயில்வோனின் துணைவியாம் மஹாலட்சுமி தாயாருக்கு நீலக்கடல் அருகே கோயில் கட்ட ஆவல் கொண்டார்.
அப்போது எலியட்ஸ் பீச் அருகே எட்டு கிரவுண்ட் நிலம் விலைக்கு வந்தது. ஒரு கிரவுண்ட் ஐயாயிரம் ரூபாய் வீதம் 8 கிரவுண்ட் வாங்க நாற்பதாயிரம் தேவைப்பட்டது. 1970 களில் இப்பெரிய தொகையை ஒரு உபன்யாசகர் எப்படிச் சேர்க்க முடியும்?
இவர் உபன்யாசம் செய்யச் செல்லும் இடங்களெல்லாம் பெரியவாளின் கட்டளையையும் அதற்கு தான் முயற்சிப்பதையும் பிரசங்கத்தின் போது பக்தர்களிடம் சொல்வதுண்டு. அப்படி அவர் ஆந்திர மாநிலத்தில் உபன்யாசம் செய்தபோது மஹாபெரியவாளின் ஆக்ஞையை சபையோரிடம் சொன்னபோது, அதில் ஒரு பக்தர் பேங்க் அதிகாரியாக அமைந்து விட எந்தவித பத்திரங்களோ அடமானங்களோ இல்லாமல் நாற்பதாயிரம் ரூபாயை கடனாகத் தருவதாக வலிய வந்து தெரிவித்துக் கொண்டார்.
பின் இவர் அந்த பேங்க் அதிகாரியையும் அழைத்துக் கொண்டு வந்து பெரியவாளை தரிசித்து கடன் கொடுக்க சம்மதித்த விபரத்தை சமர்ப்பித்தார். பெரியவாளெனும் ஈஸ்வரர் திருவிளையாடலாக "ஆமாம்! இந்த கடனை எப்படி அடைக்கப்போறே?" என்று குறும்பு கலந்த கேள்வியை எழுப்பி விட்டு தானே அதற்கான உபாயமும் செய்வித்தார்.
அப்போது கல்கி வார இதழின் நிர்வாகியாக இருந்த சதாசிவத்தை அழைத்து "வீட்டுக்கு அஷ்டலட்சுமி சென்னைக்கு ஒரு மகாலட்சுமி" என்று தலைப்பிட்டு இக் கோயிலுக்காக கல்கி வார இதழில் ஒரு விளம்பரத்தை வெளியிடச் சொன்னார்.
இடையே அச்சகம் நடத்திவரும் ஒருவரைக் கூப்பிட்டு வரச்செய்து அவரிடம் எட்டு லட்சுமிகள் படம் ஒன்றை அச்சிடுமாறு உத்தரவிட்டார். நல்ல கலர் ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட அந்த அஷ்டலட்சுமி படத்துக்கு பதினோரு ரூபாய் என விலை நிர்ணயம் பெரியவாளாலேயே செய்யப்பட்டது.
நிலத்தின் கடன் நாற்பதாயிரம் என்றிருக்க ஒரு படம் பதினோரு ரூபாய் வீதம் எத்தனை படம் அச்சிட்டு விற்பனை செய்தால் இந்த நாற்பதாயிரம் தேறுமோ அத்தனை படங்களை மட்டும் அச்சிடச் சொன்னார்.
அதில் பத்து ரூபாயை கோயிலுக்கும் ஒரு ரூபாயை அச்சகத்திற்கும் எடுத்துக் கொள்ளவும் உத்தரவானது. இப்படி மஹாபெரியவாளின் அனுக்ரஹம் பெற்ற படம் என்று குறிப்பிட்டு விநியோகிக்கப்பட்ட இந்த அஷ்டலட்சுமி படத்திற்கு பக்தர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதில் அதிசயம் என்னவென்றால் பிரபல நாத்திக தலைவர் ஒருநாள் முக்கூர் ஸ்ரீநிவாச வரதாச்சாரியர் இல்லத்தின் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டு அவருக்கும் இரண்டு படம் வேண்டுமென்று அதற்கான பணத்தையும் கொடுத்து வாங்கிச் சென்றார்.
"இதில் மஹாபெரியவரோட அனுக்ரஹம்னு போட்டிருக்குன்னு சொன்னதாலே வாங்கிட்டுப் போறேன்" என்று அந்த தாடி வைத்த தலைவர் சொன்ன போது இவருக்கு வியப்பேற்பட்டது. இப்படி வியக்கும் வகையில் பெரியவாளருளால் கோயில் நிலம் வாங்கப்பட்டது.
முதலில் மஹாலட்சுமிக்கு மட்டுமே கோயில் என்று ஆரம்பிக்கப்பட்டு எட்டு லட்சுமிக்கும் கோயிலாக இது அமையும் பேரருள் நிகழ்ந்தது. ஒவ்வொரு லட்சுமி விக்ரகத்துக்கும் ஒவ்வொரு பக்தர் உதவிட எல்லா லட்சுமி விக்ரகங்களும் வடிக்கப்பட்டவுடன் மஹாபெரியவாளிடம் கொண்டு செல்லப்பட்டு ஆசி பெறப்பட்ட பின்புதான் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்திற்கு பெரியவாளை அழைத்தபோது அது ஒரு வைணவ கோயிலாதலால், அழகிய சிங்கரையே அழைப்பது தான் நியாயம் என்று தர்மம் வழுவாதவராய் தெய்வம் கட்டளையிட அவ்வாறே ஏற்பாடானது.
அஹோபில மடம் ஜீயர் அழைப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் மஹாலக்ஷ்மி ஆலயத்தில் மஹா விஷ்ணு இல்லாமல் தனியாக மஹாலக்ஷ்மி ஸ்தாபனம் செய்வது ஏற்புடையதல்ல என்று சொல்லி விட்டார். சம்ரோக்ஷணம் ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. ஒரே ஒரு வார காலம் தான் இருக்கிறது. எங்கே போவது மகாவிஷ்ணுவுக்கு? முக்கூர் மஹா பெரியவாளிடம் ஓடி நிலைமையை சொன்னார். பெரியவா மஹாபலிபுர ஸ்தபதி ஒருவரிடம் சொல்லி ஒருவாரத்தில் மஹாவிஷ்ணு வந்து சேர்ந்து விட்டார். அவரையும் மஹாலக்ஷ்மி சந்நிதியில் ஸ்தாபித்தாகி விட்டது. 1976ம் வருஷம் ஏப்ரல் 5 அன்று கும்பாபிஷேகம் ஆனது.
மஹாபெரியவாளெனும் ஈஸ்வரரின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஸ்ரீமந் நாராயணனோடு நமக்கெலாம் லட்சுமி கடாக்ஷம் பொழிகிறாள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu