50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள்

50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் மலைக்கிராம மக்கள்
X

அகமலை கிராமங்களுக்கு செல்லும் பாதை 

தேனி மாவட்டத்தில் அகமலை மலைப்பகுதியில் உள்ள ஐந்து கிராம மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதியின்றி தவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மலைப்பகுதியில் அகமலை, சொக்கன்அலை, ஆதிவாசி குடியிருப்பு, மருதையனுார், அலங்காரம் உட்பட பல கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் காபி, வாழை, எலுமிச்சை, நார்த்தங்காய், ஏலக்காய் போன்ற பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த விளைபொருட்களை பெரியகுளம் கொண்டு வர ரோடு வசதிகள் இல்லை.

தற்போது பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை வழியாக கண்ணக்கரை வரை சாலை வசதி உள்ளது. அங்கிருந்து மூன்று கி.மீ., துாரம் ரோடு அமைத்தால், இந்த ஐந்து கிராமங்களுக்கும் ஓரளவு பலன் கிடைக்கும்.

மலைப்பகுதியில் சாலை அமைக்க நிலம் எடுத்தால், அதற்கு மாற்றாக இரண்டரை மடங்கு நிலம் வேறு இடத்தில் வாங்கி வனத்துறைக்கு வழங்க வேண்டும். விவசாயிகள் அப்படி நிலமும் வாங்கி கொடுத்து விட்டனர். வனத்துறைக்கு நிலம் கொடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.

ஊரக வளர்ச்சி முகமை இந்த சாலை அமைக்க 40 லட்சம் ரூபாய் நிதி வனத்துறைக்கு வழங்கி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி நடக்கவில்லை. சாலை அமைக்காததால், இந்த கிராமங்களுக்கு அடிப்படை கட்டுமான பொருட்கள் கூட கொண்டு செல்ல முடியவில்லை.

இக்கிராமங்களில் உள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்க கூட பொருட்கள் கொண்டு செல்ல வழியில்லை. விளைபொருட்களை எடுத்து வரவும் வழியில்லை. விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

எனவே இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!