பாம்புகளுடன் மரணப்போராட்டம்: நெடுஞ்சாலையோர வியாபாரிகள் தவிப்பு

தேனி பெரியகுளம் ரோட்டோரம், மாவட்டநீதிமன்றம் அருகில் சாலையோர கடைக்குள் புகுந்த பாம்பினை பிடிக்க தீயணைப்புத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வேலையில்லை. வறுமை. தொழில் செய்யலாம் என்றால் கடை வாடகை கொடுக்க முடியவில்லை. இப்போதைய நிலையில் சிறிய நகர்ப்பகுதிக்குள் ஒரு கடை வைத்து வியாபாரம் செய்ய குறைந்தது 20 லட்சம் ரூபாயாவது முதலீடு வேண்டும். அதுவும் வியாபாரம் நடந்தால் தான் ஆச்சு. இல்லாவிட்டால் வட்டி கட்டி காலியாகி விடும். கரண்ட் பில், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, டெக்கரேஷன் செலவு என பல்வேறு செலவுகள் ஏற்படும். இதனை மாதந்தோறும் சமாளிக்க முடியாது
இப்படி பல்வேறு இடர்பாடுகளை கடக்க முடியாத வியாபாரிகள், தங்களிடம் இருக்கும் சில ஆயிரம் ரூபாய்களை முதலீடு செய்து, பொருட்கள் வாங்கி, நான்கு வழிச்சாலை ஓரங்கள், தேசிய நெடுஞ்சாலை ஓரங்கள், மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், கிராமச்சாலைகளின் ஓரங்களில் ஒரு மரத்தின் அடிப்பகுதில் அமர்ந்து தொழில் செய்கின்றனர். கிட்டத்தட்ட சாலையி்ன் ஓரங்களில் அத்தனை வகையான கடைகளும் வந்து விட்டன.
இவர்களுக்கு என்னப்பா சாலை ஓரம் இடம் பிடித்து செலவு இல்லாமல் கடை விரித்து சம்பாதிக்கின்றனர் என மிகவும் எளிதில் கூறி விட முடியாது. தினம், தினம் இவர்கள் மரணப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆமாம். உலக அளவில் பாம்புகள் அதிகம் வாழும் நாடு இந்தியா. இந்தியாவில் பாம்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இடம் பிடித்துள்ளது. அதுவும் மலை மாவட்டமான தேனி மாவட்டத்தில் பாம்புகளின் நடமாட்டம் பற்றி சொல்லவே வேண்டாம்.மிக அதிகமாக பாம்புகள் உள்ளன.
பொதுவாக பாம்புகள் எப்போதும் ரோட்டோரம் உலா வரும். இப்போது அதிக வெயில் மற்றும் மழைக்காலம் என்பதால் பாம்புகள் அதன் வாழ்விடமான புற்றுக்குள் வாழ்வது சிரமம். இது போன்ற காலங்களில் அதிகம் வெளியே வரும். இப்படி வெளியே வரும் பாம்புகள் சாலை ஓரம் உள்ள கடைகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனை சாலையோர வியாபாரிகள் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடிக்காமல் பாம்பு உள்ள இடத்தில் கை வைத்தால் அதோகதி தான். பாம்புகள் கொத்தி விடும். கண்டுபிடித்தால், அதனை பிடிப்பதற்குள் ஓடி ஒளிந்து விடுகின்றன.
சில நேரங்களில் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்து அழைத்து பிடிக்கின்றனர். அப்படி பிடிக்கப்பட்ட பாம்புகளை மீண்டும் சில மீட்டர்கள் தொலைவில் உள்ள தோட்டங்களில் அல்லது மலையடிவாரங்களில் கொண்டு போய் விடுகின்றனர். திரும்பவும் அவைகள் கடைகளை நோக்கி வருகின்றன. பெரும்பாலான நேரங்களில் கடைகளை அடைத்த பின்னர், இரவில் கடைகளுக்குள் புகுந்து பதுங்கி விடுகின்றன. மறுநாள் மிகவும் உஷாராக கடை திறக்க வேண்டி உள்ளது.
எந்த இடத்தில் எந்த வகை பாம்பு பதுங்கியிருக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணம். இப்படி சாலையோர வியாபாரிகள் பிழைப்பிற்காக பாம்புகளுடன் பெரும் அளவில் மரணப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu