தேனி மாவட்டத்தில் பலத்த மழை: மஞ்சளாறு அணையில் 105 மி.மீ., பதிவு
தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் போடி அணைக்கரைப்பட்டி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Heavy Rain Fall -தேனி மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஆண்டிபட்டியில் 40.2 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 4 மி.மீ., போடியில் 15.4 மி.மீ., கூடலுாரில் 7.2 மி.மீ., மஞ்சளாறில் 105 மி.மீ., பெரியகுளத்தில் 5 மி.மீ., பெரியாறு அணையில் 19.6 மி.மீ., தேக்கடியில் 16.4 மி.மீ., சோத்துப்பாறையில் 26 மி.மீ., உத்தமபாளையத்தில் 5.6 மி.மீ., வைகை அணையில் 24.2 மி.மீ., வீரபாண்டியில் 13 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இந்த மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2300 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1300கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 128 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
வைகை அணைக்கு நீர் வரத்து 1400 கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து 900ம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 67.50 அடியை எட்டி உள்ளது. இதேபோல் மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. முல்லை பெரியாறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, வராகநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தி உள்ளது. எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், சுருளிஅருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை அருவி, அணைக்கரைப்பட்டி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக்காக இங்கு பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் முழு அளவில் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள அத்தனை கண்மாய்கள், குளங்களில் நீர் வரத்து கண்காணப்பு பணிகள் தினமும் நடந்து வருகின்றன.
உள்ளாட்சிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களில் எல்லாம், நீரை வெளியே கடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பரவும் வாயப்பு உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தாங்கள் வசிக்கும் பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்கிய நீரை உள்ளாட்சிகளின் உதவியுடன் வெளியேற்ற வேண்டும். மக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும் என சுகாதாரத்துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது கம்பம் பள்ளத்தாக்கில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பலத்த மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தவிர நெல்லில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உ ள்ள பதிமூன்று அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் கூடுதல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu