தேனி மாவட்டத்தில் பலத்த மழை: பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் அரண்மனைப்புதுார் முல்லையாற்றில் அதிகளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று காலை 3 மணிக்கு தொடங்கிய மழை 6.30 மணி வரை நீடித்தது. பின்னர் இரவு 7.30 மணிக்கு லேசான சாரலுடன் தொடங்கியது. இடைவிடாமல் சாரல் பெய்து கொண்டே இருந்தது.காலை 5 மணிக்கு மேல் மழை வலுத்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை காணப்பட்டது. தொடர்ந்து 10 மணி முதல் 11 மணி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையமும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார். தற்போது காலை 8 மணிக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் கருமேகங்களால் சூழப்பட்டு இருளடைந்து காணப்படுகிறது. காலை 5.30 மணிக்கு எப்படி மங்கலான வெளிச்சத்தில் இருக்குமோ அதனைப் போல் உள்ளது. சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது.
ஆறுகள், குளங்கள், ஏரிகள், அணைகள் என அத்தனை நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சுருளிஅருவி, சின்னசுருளி அருவி, கும்பக்கரை அருவி, அணைக்கரைப்பட்டி தடுப்பணை பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும் குளிக்க செல்ல வேண்டாம். நீர்நிலைகளில் எக்காரணம் கொண்டும் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் முல்லைப்பெரியாறு பாசன பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிக நிலங்களில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நடவுப்பணிகளும் நிறைவடைந்து விட்டன. குச்சனுார், கோட்டூர், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் இரண்டாம் போக நெல் நடவு பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் நெல் நடவுப்பணிகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தேனி மாவட்டத்தில் இருபோக நெல் சாகுபடி நிலங்களில் தடையின்றி சாகுபடி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு மட்டு்ம் விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்லுாரிகளுக்கும் வி டுமுறை வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும், மாணவ,மாணவிகளும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை தொடர்ந்து பள்ளிகளை தொடர்ந்து கல்லுாரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. ஆனால் இதர அரசு அலுவலகங்கள் வழக்கம் இயங்கும். அரசுப்பணிகள் தடையின்றி நடக்கும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால், கண்மாய்கள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், அருவிகளை கண்காணித்து அறிக்கை வழங்குமாறும், தொடர் கண்காணப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் வருவாய்த்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu