தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை வைகையில் முதல் கட்ட வெள்ள அபாயம்?
தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று இரவு 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் வெளுத்துக்கட்டியது. ஆண்டிபட்டியில் 34.6 மி.மீ., வீரபாண்டியில் 23.6 மி.மீ., பெரியகுளத்தில் 25 மி.மீ., மஞ்சளாறில் 42 மி.மீ., சோத்துப்பாறையில் 46 மி.மீ., வைகை அணையில் 30 மி.மீ., போடியில் 5.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 11.4 மி.மீ., கூடலுாரில் 5.4 மி.மீ., பெரியாறு அணையில் 27.4 மி.மீ., தேக்கடியில் 11.2 மி.மீ., சண்முகாநதியில் 6.6 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழையால் வைகை அணைக்கு விநாடிக்கு காலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து ஆயிரத்து 500 அடியை தாண்டியது. இன்னும் நீர் வரத்து அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர் மட்டம் 65.16 அடியை கடந்தது. அணை நீர் மட்டம் 66 அடியை எட்டியதும், அணையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இன்று மாலைக்குள் நீர் மட்டம் 66 அடியை எட்டும் வாய்ப்பு உள்ளதால், இன்று எந்த நேரமும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வெளியாகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணை நீர் மட்டம் 68.5 அடியை தொட்டதும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும், நீர் மட்டம் 69 அடியை தொட்டதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எசு்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படும். இதற்கிடையில் அரசின் உத்தரவை பொறுத்து அணை பாசனத்திற்கு திறக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளது.
பெரியாறு அணை நீர் மட்டம் 125 அடியை தாண்டியது. இன்று காலை நீர் மட்ட உயரம் 125.5 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1600 கனஅடியாக இருந்தது. இன்னும் நீர் வரத்து உயரும். வடகிழக்கு பருவமழையில் வரும் நீரை பயன்படுத்தி இந்த மாதம் எப்படியும் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரியகுளம் சோத்துப்பாறை நீர் மட்டமும் உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து 130 கனஅடியாக உள்ளது. நீர் மட்ட உயரம் 126.60 அடியாக உள்ளது. மஞ்சளாறு மற்றும் சண்முகாநதி அணைகளுக்கும் நீர் வரத்து உள்ளது. தொடர் மழையால் சுருளிஅருவி, கும்பக்கரை அருவி, அணைக்கரைப்பட்டி தடுப்பணை நீர் வீழ்ச்சி உள்ளிட்ட ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் உட்பட எதிலும் குளிக்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை. நீர் நிலைகளின் பக்கம் வர வேண்டாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu