தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : சோத்துப்பாறை 126 மி.மீ., தேனி 104.6 மி.மீ...!

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை :  சோத்துப்பாறை 126 மி.மீ., தேனி 104.6 மி.மீ...!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சின்னசுருளியில் கொட்டும் அருவி.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 24 மணி நேரத்தை கடந்து மழை பெய்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று காலை 10 மணிக்கு பல இடங்களில் மழை தொடங்கியது. பெரியகுளம், கம்பம், கூடலுார் பகுதிகளில் காலை 10 மணிக்கு தொடங்கி தற்போது வரை பெய்கிறது. அதேபோல் மேகமலை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை, இடைவெளியின்றி தற்போது வரை பெய்கிறது.

தேனி மாவட்டம், பள்ளத்தாக்கு மாவட்டம் என்பதாலும், ஆறுகள், சிற்றோடைகள் நிறைய இருப்பதாலும் பெரும் மழை பெய்தும் மழைநீர் தேங்காமல், உடனடியாக கடந்து சென்று விடுகிறது. இதனால் மழைச்சேதம் பெரிய அளவில் எங்கும் இல்லை.

இன்று காலை நிலவரப்படி ஆண்டிபட்டியில் 86.6 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 93.2 மி.மீ., தேனி வீரபாண்டியில் 104.6 மி.மீ., பெரியகுளத்தில் 96 மி.மீ., மஞ்சளாறில் 52 மி.மீ., சோத்துப்பாறையில் 126 மி.மீ., வைகை அணையில் 75 மி.மீ., போடிநாயக்கனுாரில் 84.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 32.6 மி.மீ., பெரியாறு அணையில் 82 மி.மீ., தேக்கடியில் 108 மி.மீ., சண்முகாநதியில் 88 மி.மீ., மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் இடைவிடாமல் மழை பெய்வதாலும், ஆறுகள், அருவிகளில் நீர் வரத்து கொட்டுவதாலும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


மழையால் சின்னசுருளி அருவி, சுருளி அருவி, அணைக்கரைப்பட்டி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, பெரியாற்றில் அதிகளவு நீர் வரத்து உள்ளது. வைகை ஆற்றில் அதிகபட்சமாக விநாடிக்கு ௧௮ ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எந்த நிமிடமும் வைகை அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கும் வாய்ப்புகள் உள்ளன. மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story