தேனியில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தேனியில் அதள பாதாளத்துக்கு சென்ற நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

காட்சி படம் 

தேனி மாவட்டத்தில் 50 அடிக்குள் கிடைத்த நிலத்தடி நீர் மட்டம் இன்று ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினாலும் கிடைக்கவில்லை.

தேனி தனி மாவட்டமாக உருவான போது, மாவட்டத்தில் 50 அடிக்குள் கிடைத்த நிலத்தடி நீர் மட்டம் இன்று ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினாலும் கிடைக்கவில்லை. ‛கிரிட்டிக்கல் ஜோன்’ என்ற அபாய நிலையை மாவட்டம் எட்டியதற்கு அரசு நிர்வாகத்தின் மெத்தன போக்கே காரணம் என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டம் 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போதே ஆட்சியர் அலுவலகம் மட்டுமின்றி 68க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் வந்து விட்டன. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது எல்லா பகுதிகளிலும் நிலத்தடி நீர் சராசரியாக 50 அடியில் கிடைத்தது. தேனியில் மழை பெய்தால் தரைதளத்திற்கு கீழ் கட்டப்பட்டிருக்கும் முதல் தளத்தில் நீர் ஊற்று கிளம்பி விடும். வியாபாரிகள் பாத்திரங்களில் நீரை அள்ளி வெளியே ஊற்றுவார்கள். தேனி பேருந்து நிலையத்தினை சுற்றிலும் உள்ள பல கடைகளில் இந்த நிலை இருந்தது.

இப்போது உள்ள வியாபாரிகள் அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் தற்போது எங்கு தோண்டினாலும் ஆயிரம் அடியை தாண்டினால் தான் தண்ணீர் என்ற நிலை உருவாகி விட்டது. தேனியில் சில இடங்களில் 1500 அடியை தாண்டி விட்டன. தேனியில் சில வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டிற்கு 2000ம் அடி ஆழம் வரை போர்வெல்கள் போட்டுள்ளன. இதற்காக ராஜஸ்தானில் இருந்து சிறப்பு என்ஜின்கள் வரவழைக்கப்பட்டன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள்கூறுகையில், தேனி மாவட்டம் உதயமான பின்னர் நீர் மேலாண்மையில் வளர்ச்சியை விட வீழ்ச்சியே அதிகம். குறிப்பாக நீர் மேலாண்மைக்காக அரசு செலவிட்ட பல கோடி ரூபாய்கள் வீணாகிப்போனது தான் மிச்சம்.

தேனியில் வியாபாரிகளின் நிலையே இப்படி என்றால் விவசாயிகள் நிலை இன்னும் மோசம். தானாக தண்ணீர் பாய்ந்த பாசன நிலங்களில் இன்று சொட்டுநீர் பாசனத்திற்கு கூட தண்ணீர் இல்லை. மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த 23 ஆண்டுகளாக விவசாய பொறியல் துறைகள் பல நுாறு தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் கட்டின. விவசாய பொறியியல்துறை ஆவணங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள் எண்ணிக்கையினை கணக்கிட்டால் பல ஆயிரத்தை தாண்டும்.

ஆனால் நிலத்தடி நீர் உயர்வதற்கு பதிலாக வீழ்ச்சியை சந்திக்க காரணம் என்ன? தடுப்பணைகள் கட்டப்பட்டவில்லையா? அல்லது தரக்குறைபாடு இருந்ததா, கசிவுநீர் குட்டைகள் பல காணாமல் போன மர்மம் என்ன? என என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினர்.

இது குறித்து மாவட்ட விவசாய சங்க தலைவர் பாண்டியன் கூறுகையில், தேனி மாவட்டத்தில் நீர் மேலாண்மை மிகவும் மோசமாகவே உள்ளது. விவசாயம் செய்வது என்பது இப்போது நினைத்து பார்க்க முடியாத அளவு கடினமான தொழிலாக மாறிப்போனது. நிலத்தடியில் எங்குமே நீர் இல்லை.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பொதுப்பணிததுறைக்கு சொந்தமான 100 கண்மாய்களிலும், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான 600 கண்மாய்களிலும் கண்மாய்க்கு ஏற்ற வகையில் சராசரியாக தலா 10 நீர் சேமிப்பு கிணறுகள் அமைக்க வேண்டும். மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக நிலத்திற்குள் செலுத்த வேண்டும். இனிவரும் காலங்களில் நிலத்தடி நீர் மேலாண்மைக்கு தனி அதிகாரிகளை நியமித்து, நீர் வளத்தை அதிகரிக்காவிட்டால், தேனி மாவட்டம் எதிர்காலத்தில் பெரும் வறட்சியில் சிக்கி விடும் என்று கூறினார்.

Tags

Next Story