தேனியில் களை கட்டும் பசும்புல் சந்தை..!
தேனி புல் சந்தை
தேனி அல்லிநகரத்தில் செயல்படும் பசும்புல் சந்தையில் மாட்டுத்தீவனங்களின் விலை குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனியில் உள்ள சில விவசாயிகள் தங்களது தோட்டங்களில் சோளத்தட்டை, சீமைப்புல் போன்றவற்றை சாகுபடி செய்து, பக்குவமான வளர்ச்சி பெற்றதும் அதனை அறுவடை செய்து, அல்லிநகரம் பசும்புல் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு 5 ரூபாய் அளவுள்ள சிறிய கட்டுகளாக கட்டி விற்பனை செய்கின்றனர்.
காலை 6 மணிக்கு செயல்படத் தொடங்கும் இந்த சந்தை மாலை 6 மணி வரைக்கும் செயல்படுகிறது. அல்லிநகரத்தில் பாத்திமா தியேட்டர் அருகே உள்ள பெரியகுளம் ரோட்டோர சந்திப்பில் இந்த சந்தை பல ஆண்டுகளாக செயல்படுகிறது. தற்போது மழைப்பொழிவு சுமாராக இருப்பதாலும், விளைச்சல் நன்றாக இருப்பதாலும், ஒரு கட்டு பசும்புல் 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். விவசாயிகளுக்கு இது கட்டுபடியான விலை. எனவே விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என பசும்புல்சந்தை விவசாயிகள் தெரிவித்தனர்.
இதில் சிறப்பு என்னவென்றால், சோளத்தட்டை அவரவர் கால்நடை பயன்பாட்டுக்காக விவசாய நிலங்களில் பயிர் செய்தனர். தற்போது விவசாயம் செய்வதற்கு ஆளில்லை. பல விவசாய நிலங்கள் வீட்டு நிலங்களாக மாறிவிட்டன. பலர் கால்நடைகளை மேய்ச்சல் நிலங்களில் மேய்த்து வந்தனர். தற்போது, காட்டுப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் கால்நடை வைத்திருப்போர் தங்களது கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் சில விவசாயிகள் புல் தீவனத்தை பயிர் செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஒரு காலத்தில் ஆட்டுக்கல்லில் நாமே இட்லி,தோசைக்கு மாவாட்டினோம். இப்போது ஆட்டி விற்பனைக்கு வைத்துள்ள மாவை வாங்குகிறோம் இல்லையா? அதுபோலவே தீவனப்புல்லும் வந்துவிட்டது.
இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறதோ? மாற்றம் ஒன்றே மாறாதது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu