வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!

வீரபாண்டி கௌமாரியம்மன்  திருவிழா இன்று தொடங்கியது..!
X

 கௌமாரியம்மன் 

தேனி மாவட்டத்தில் புகழ்வாய்ந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று தொடங்கியது.

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா. அதுவும் மதுரை சித்திரை திருவிழாவிற்கு இணையான மிகப்பெரிய திருவிழா வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் விழா. இந்த விழாவின் போது கோயிலின் இருபுறமும் சுமார் 3 கி.மீ., தொலைவிற்கு விழாத்திடல்கள் இருக்கும். அதாவது விழாத்திடல் குறைந்தது 6 கி.மீ., வரை நீண்டிருக்கும். திடலுக்குள் பல ஆயிரம் கடைகள், பல்வேறு வகையான ராட்டினங்கள், சர்க்கஸ், மாயாஜால காட்சிகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் என அத்தனை அம்சங்களும் நிறைந்திருக்கும்.

விழா தொடங்கிய இன்றைய நாள் முதல் வரும் ஏப்., 14ம் தேதி வரை, தினமும் குறைந்தது 2 லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள். 24 மணி நேரமும் விழாத்திடல் பக்தர்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்கும். ஒரே நேரத்தில் பல ஆயிரம் கிடா வெட்டுகள், சேவல் அறுத்து பலியிடல், பொங்கல் வைத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், சேத்தாண்டி வேடமணிதல், அக்னி சட்டி எடுத்தல், முளைப்பயிர் எடுத்தல், பறவை காவடி எடுத்தல், முக்கொம்புக்கு தண்ணீர் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துதல், மாவிளக்கு எடுத்தல் என பல நுாறு வகை நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். இதற்காக 24 மணி நேரமும் கோயில் திறந்திருக்கும். கூட்டம் அலைமோதும்.

இந்த விழாவிற்காக இரண்டு சிறப்பு பஸ்ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டிருக்கும். தேனி மாவட்டத்தின் அத்தனை ஊர்கள் வழியாகவும் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருக்கும். தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட மாவட்ட பக்தர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்த்த பக்தர்களும் கோயிலுக்கு வருவார்கள்.

இப்படிப்பட்ட உன்னதமான திருவிழா இன்று ஏப்., 7ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்குகிறது. தொடர்ந்து ஏப்., 14ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி வரை நடக்கிறது. தொடர்ச்சியாக ஏப்., 15ம் தேதி புதன் கிழமை ஊர்பொங்கல் நடைபெறும். அந்த ஊர் பொங்கலுடன் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்., 9ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கும். அமைச்சர்கள், கலெக்டர், எஸ்.பி., என முக்கிய வி.வி.ஐ.பி.,க்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அன்றை தினம் மாவட்டத்திற்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான மாற்று வேலை நாள் அடுத்து வரும் சனிக்கிழமைகளில் ஈடுசெய்யப்படும்.

1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 400க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுவார்கள். இவ்வளவு இருந்தும் பக்தர்கள் கூட்ட நெரிசலால் விழாத்திடல் சற்று சுகாதாரக்குறைபாட்டுடன் தான் இருக்கும். விழா தொடங்கி நிறைவடைவதற்குள் பல லட்சம் பேர் வந்து செல்வதால் அத்தனை பேருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்வது என்பது மிகப்பெரிய இமாலய பணியாகும். இதனால் இதில் சிறு, சிறு குறைபாடுகள் இருக்கும். இருந்தாலும் பக்தர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

தாங்கள் வந்தது சாமி கும்பிட என்பதை உணர்ந்து கௌமாரியம்மனையும், கண்ணீர்ஸ்வரமுடையாரையும் வழிபட்டு விட்டு வீடு திரும்புவார்கள். கோயிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் குறைந்தது 5 மணி நேரம் முதல் அதிகபட்சம் 24 மணி நேரம் வரை விழாதிடலில் நேரம் செலவிடுவார்கள் என்றால் கூட்டத்தின் அளவினை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

இந்த விழாத்திடல் திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது. இந்த பக்தர்கள் கூட்டத்தை கடந்து பஸ்கள் செல்ல முடியாது. எனவே போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீரபாண்டி வழியாக செல்லும் அனைத்துப் பேருந்துகளும் வீரபாண்டியில் நின்று பக்தர்கள் இறங்கி ஏறும் வகையில் செயல்பட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவிழாக்காலமான 07.05.2024 முதல் 14.05.2024 முடிய தேனியிலிருந்து சின்னமனூர் மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் உப்புக்கோட்டை விலக்கு , மார்க்கையன்கோட்டை விலக்கு, குச்சனூர், வழியாக மாற்றுப்பாதையில் சின்னமனூர் செல்லும்.

மேலும், சின்னமனூரிலிருந்து தேனி மார்க்கத்தில் வரும் அனைத்து வாகனங்களும் உப்பார்பட்டி பிரிவிலிருந்து தாடிச்சேரி, தப்புக்குண்டு, கொடுவிலார்பட்டி வழியாக தேனி வந்தடையும். கோவில் வளாகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது