தேனி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சலுகை
பைல் படம்
தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயத்தை முழுமையாக சொட்டுநீர் பாசன முறையில் சாகுபடி செய்ய வசதியாக, கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் இயல்பான அளவினை விட கூடுதல் மழை கிடைத்தாலும், கண்மாய்கள் நிரம்பாததால் நிலத்தடி நீர் மட்டம் உயரவில்லை. இந்நிலையில் குறைந்த நீர் மூலம் பாசனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் விவசாயிகளுக்கு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளின் தேவை உணர்ந்து அவர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கி வருவதாக தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் அமைக்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரையிலும், பெரிய விவசாயிகள் 12.5 ஏக்கர் வரையிலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் பெறலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீரை கொண்டு, இரண்டரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியும். அதிக விளைச்சலும் எடுக்க முடியும். உரமிடுவதும் எளிது. பணியாளர் செலவுகளும் குறையும்.
கரும்பு விவசாயத்தை முழு அளவில் சொட்டுநீர் பாசன முறைக்கு மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு எக்டேருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 368 ரூபாய் வழங்கப்படும். கிணறு பாசனம் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு இந்த மானியத்துடன் கூடுதலாக 38 ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும்.
இதன் மூலம் அவர்கள் கூடுதல் பைப் லைன், மண்வடிகட்டி, தட்டுவடிகட்டி, வால்வுகள் அமைத்துக் கொள்ளலாம். இதே விவசாயிகள் போர்வெல் பாசனம் செய்தால் அவர்களுக்கு வழக்கமான மானியத்துடன் 24 ஆயிரத்து 711 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்.விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி மானியத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu