தேனி மாவட்ட நகர், கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள்
தேனி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை (தற்போது இருவழிச்சாலை பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளது) வத்தலக்குண்டில் தொடங்கி லோயர் கேம்ப் வரை செல்கிறது. வழியில் தேவதானப்பட்டி, பெரியகுளம், லட்சுமிபுரம், தேனி, பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனுார், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கம்பம் புதுப்பட்டி, கம்பம், கூடலுாரை கடந்து லோயர் கேம்ப் செல்கின்றன.
இதில் கோட்டூர், சீலையம்பட்டி, அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களின் நடுவே நான்கு வழிச்சாலை செல்கிறது. இப்படி சென்றாலும், அங்கு நிற்பதில்லை. குறிப்பாக குமுளி, கம்பம் பகுதியில் இருந்து திருச்சி, கோவை, செங்கோட்டை, தென்காசி, நெல்லை செல்லும் பேருந்துகள் இந்த கிராமங்களில் நிறுத்தப்படுவதில்லை.
காரணம் புறப்படும் இடத்திலேயே பயணிகளால் நிறைந்து விடுகிறது. (பயணிகள் குறைவாக இருந்தாலும் நிற்பதில்லை). இதனால் நிற்காமல் செல்கின்றன. இதனை விட சிக்கல், பல நேரங்களில் ஊருக்குள்ளே வராமல், பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன.
இந்த பேருந்துகளுக்காக காத்திருப்பவர்கள் தேனி வந்து தான் மாறிச் செல்ல வேண்டும். இது பற்றி பொதுமக்கள் பலமுறை அரசு போக்குவரத்துக்கழகத்திடம் மனு கொடுத்தும் பலன் இல்லை.
தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என கடும் போராட்டங்கள் நடத்தி, அதற்காக மக்களிடம் ஆதரவு தேடும் அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர்கள் எல்லோரும், மக்களின் சூழ்நிலைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என ஒட்டுமொத்த தேனி மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu