முன்னாள் முதல்வர் தொகுதியில் முறைகேடு : மினிபஸ்களுக்கு வழிவிடும் அரசு பஸ்கள்..!

முன்னாள் முதல்வர் தொகுதியில் முறைகேடு :  மினிபஸ்களுக்கு வழிவிடும் அரசு பஸ்கள்..!
X

தேனி அருகே பூதிப்புரத்தில் இருந்து மஞ்சிநாயக்கன்பட்டிக்கு செல்லும் ரோடு ஆக்கிரமிப்பால் மிகவும் குறுகி ஒரு மினிபஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் காலை நேரங்களில் இந்த வழியாக பள்ளி பஸ்கள், ஆட்டோக்கள் அதிகம் வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போடி தொகுதியில், உள்ள பல கிராமங்களுக்கு மினிபஸ்களை இயக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

தேனி அருகே உள்ள முன்னாள் முதல்வர் எம்.எல்.ஏ.,வாக உள்ள போடி தொகுதிக்கு உட்பட்ட ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், கெப்புரெங்கன்பட்டி மஞ்சிநாயக்கன்பட்டி, வலையபட்டி, கோடாங்கிபட்டி மக்கள் முழுக்க தங்களின் வாழ்வாதாரத்திற்கு தேனி நகரத்தையே நம்பி உள்ளனர்.

வேலை வாய்ப்பு, மருத்துவம், பலசரக்கு பொருட்கள் வாங்குதல் உட்பட எந்த தேவைக்கும் அவர்கள் தேனி வந்தாக வேண்டும். கோடாங்கிபட்டி மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்கு பூதிப்புரம் வருகின்றனர். ஆனால் இந்த கிராமங்கள் அனைத்தும் ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து அமைந்திருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களை இயக்குவதில்லை. நான்கு தனியார் மினி பஸ்கள் எந்த நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. கோடாங்கிபட்டி மாணவர்கள் பஸ் பாஸ் இருந்தும் மூன்று கி.மீ., துாரம் நடந்து பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என போக்குவரத்துக்கழக நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. பஸ் வேண்டும் என மனு கொடுத்தால் ஓரிரு நாள் இயக்குகின்றனர். பின்னர் நிறுத்தின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் மினி பஸ்களை இயக்குபவர்களுக்கும் இடையே உடன்பாடு இருக்கலாம் என எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

மினி பஸ்களுக்கு உதவவே அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை என சந்தேகப்படுகிறோம். பொதுமக்கள் மினி பஸ்களை மட்டுமே நம்ப வேண்டி உள்ளதால், மினி பஸ்களில் மிக, மிக அதிகளவு பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் மிகவும் சிரமத்துடன் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

எனவே, இனிமேல் இப்பிரச்னையை நேரடியாக தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள முன்னாள் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம். தவிர பூதிப்புரம்- மஞ்சிநாயக்கன்பட்டி ரோடு மிகவும் குறுகலாகவும், பஸ்கள் விலகிச் செல்ல வழி இல்லாத அளவுக்கு நெரிசலாகவும் உள்ளது. ரோட்டினை இருபுறமும் மக்கள் ஆக்கிரமித்து இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை அகலப்படுத்தவும் முன்னாள் முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!