ஆடு வளர்க்கலாம் வாங்க. மானியத்தை அள்ளித்தரும் மத்திய அரசு

ஆடு வளர்க்கலாம் வாங்க. மானியத்தை அள்ளித்தரும் மத்திய அரசு
X

ஆடு வளர்ப்பு - கோப்புப்படம் 

ஆடு, மாடு வளர்க்கவும், கோழி வளர்க்கவும் மத்திய அரசு மானியத்தை அள்ளி வழங்குகிறது.

தேனி மாவட்டத்தில் 13 லட்சம் பேர் வரை வாழ்கின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் மட்டுமே சைவமாக இருக்க வாய்ப்பு உண்டு. மீதம் 12 லட்சம் பேர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள்.

தினமும் தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் ஆடுகள், பல ஆயிரம் கோழிகள் இறைச்சிக்காக அடிக்கப்படுகின்றன. பல லட்சம் லிட்டர் பால் தேவை உள்ளது. பாலினை மூலப்பொருளாக வைத்து பல நுாறு வகை உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் தேனி மாவட்டத்தில் மொத்தமே ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆடுகள் மட்டுமே உள்ளன. 5 லட்சம் கோழிகள் உள்ளன. ஒரு லட்சத்து 11 ஆயிரம் பசு மாடுகள் உள்ளன. 2 ஆயிரம் எருமை மாடுகள் உள்ளன. 240 பிராய்லர் கோழிப்பண்ணைகள் உள்ளன.

இப்போதைய இறைச்சி தேவையில் பெருமளவு பிராய்லர் கோழிகள் தான் பூர்த்தி செய்கின்றன. பிராய்லர் கோழிகளை தாராளமாக சாப்பிடலாம். இது பற்றி பரப்பப்படும் தவறான வதந்திகளை நம்பாதீர்கள் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பால் மாடுகள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. ஆடுகள் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து தான் ஆடுகள் இறைச்சிக்காக கொண்டு வரப்படுகின்றன.

ஆடு வளர்க்க மத்திய அரசு தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் 50 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. அதாவது ஒரு கோடி ரூபாய் செலவில் ஆட்டுப்பண்ணை தொடங்கினால் மத்திய அரசிடம் மானியம் மட்டும் 48 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். தேனி மாவட்டத்தில் 50 ஆட்டுப்பண்ணையாவது அமைக்க வேண்டும். அதாவது 50 கோடியில் ஆட்டுப்பண்ணை அமைக்க வேண்டும். அதில் 24 கோடி ரூபாய் வரை மானியம் மட்டும் வழங்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

மீதம் உள்ள 26 கோடியில் பயனாளியின் பங்குத்தொகை 10 சதவீதம் மட்டுமே. மீதப்பணம் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை இந்த திட்டத்தில் 3 பேர் மட்டுமே ஆட்டுப்பண்ணை அமைக்க மானியம் பெற்றுள்ளனர். இந்த இலக்கினை எட்ட இன்னும் 47 பேர் முன்வர வேண்டும் என கால்நடைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மானியம் வழங்க மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இதுவரை 2 ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடப்படவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 ஆட்டுப்பண்ணைகள் அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

ஆட்டுக்கு மட்டும் இந்த திட்டம். இதேபோல் பால் மாடு வளர்க்கவும், கோழிகள் வளர்க்கவும், மாட்டுத்தீவன உற்பத்தி அதிகரிக்கவும் மானிய திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என கால்நடைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....