மலையடிவார விவசாய நிலங்களில் விலங்குகள் புகுவதை தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்!
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் மலையடிவாரங்களில் மட்டும் பல ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் இரவில் மட்டுமின்றி பகலிலும் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகின்றன.
இவற்றை தடுக்க செல்லும் விவசாயிகளும் சில நேரங்களில் பலியாகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வனப்பரப்பு முழுக்க வேலி அமைப்பது இயலாத காரியம். விவசாயிகள் தங்கள் நிலங்களை சுற்றி மின்வேலி அமைப்பது சட்டவிரோதமான காரியம். காரணம் இந்த மின்வேலியில் வனவிலங்குகள் இறந்தால் அந்த விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறை செல்ல நேரிடும்.
அதேபோல் வேட்டை நாய்களை வளர்த்து வனவிலங்குகளை துன்புறுத்தி விரட்டுவதும் சட்டவிரோதமான செயல் ஆகும். இதனால் வனவிலங்குகள் விரும்பி சாப்பிடும் வாழை, கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களை மலையடிவார நிலங்களில் சாகுபடி செய்ய வேண்டாம்.
சில விவசாயிகள் வனவிலங்குகளை விரட்ட பட்டாசு வெடிக்கும் சத்தத்தை பதிவு செய்து, ஒலி பெருக்கியில் வைத்து ஒலிபரப்புகின்றனர். இருந்தாலும் வனவிலங்குகள் எப்போது வரும் என்பது யாராலும் கணிக்க முடியாது.
எனவே இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள வேலியில் வளர்ந்துள்ள மரங்களில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டலாம். இந்த ஸ்டிக்கர்களின் வெளிச்சத்தால் விலங்குகள் பின்வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. இது முழுமையான பலன் தரும் என்பதை உறுதியாக கூற முடியாவிட்டாலும், குறைந்தபட்ச பாதுகாப்பினை வழங்கும். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu