மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை எதிர்க்கவில்லை: தேனி விவசாயிகள் விளக்கம்

மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என தேனி முல்லைப்பெரியாறு விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு இன்று பூமிபூஜை நடந்தது. இதனை கண்டித்து இன்றும் விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து பாரதீயகிஷான் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சதீஷ்பாபு, முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன் ஆகியோர் கூறியதாவது:-

முல்லைப்பெரியாற்றில் இருந்து 58 குடிநீர் திட்டங்கள் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், பல நுாறு கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாற்றில் ஆண்டிற்கு எட்டு மாதங்கள் விநாடிக்கு ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரும். அது போன்ற நேரங்களில் மதுரைக்கு குடிநீர் எடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் ஆண்டுக்கு 4 மாதங்கள் விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கின்றனர். இந்த தண்ணீரை தான் தேனி மாவட்டத்தில் உள்ள 58 குடிநீர் திட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டும். நெல் நாற்றங்கால் வளர்ப்புக்கும் பயன்படுத்த வேண்டும்.

மதுரை குடிநீர் திட்டம் செயல்படுத்த தொடங்கி விட்டால், விநாடிக்கு 100 கனஅடி தண்ணீரையும் மதுரைக்கு எடுத்து விடுவார்கள். அப்படியானால் தேனி மாவட்டத்தில் உள்ள 58 குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். நான்கு மாதங்கள் ஆற்றில் தண்ணீர் வராவிட்டால் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்று விடும். எனவே தான் ஆற்றின் வழியாக தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு சென்று தேக்கி வையுங்கள். கோடைகாலம் 4 மாதத்திற்கும் தேவையான தண்ணீரை வைகை அணையில் சேமிக்கும் வசதி உள்ளது. அங்கு சேமித்து அங்கிருந்து குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லுங்கள். இதன் மூலம் தற்போதைய திட்டச் செலவில் பாதிகூட செலவு இருக்காது. ஆண்டுதோறும் மதுரைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் என கூறி வருகிறோம்.

இந்த விஷயம் அதிகாரிகளுக்கும் நன்கு புரிகிறது. கோடை காலத்தில் அந்த நான்கு மாதங்களும் முல்லை பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்தால் மட்டுமே மதுரைக்கு தடையின்றி விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்படும். ஆனால் இத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதிகாரிகளால் இதற்கு உரிய விளக்கம் தர முடியவில்லை.

முல்லைபெரியாற்றில் தண்ணீர் குறைவால் தொடர்ச்சியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி நடைபெற்றது. அதுபோல் பருவமழை பொய்த்தால், இத்தனை கோடி ரூபாய் செலவிட்டும் மதுரைக்கும் குடிநீர் கிடைக்காது. முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் போது, அந்த தண்ணீரை எடுத்து வைகை அணையில் சேமித்து வைத்து, மதுரைக்கு ஆண்டு தோறும் தடையின்றி தண்ணீர் தரலாமே. இதன் மூலம் தேனி மாவட்டமும், பலன் பெறும். மதுரையும் பலன் பெறுமே. இதனை அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. மாறாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்கும் பிரிவினைவாதிகள் போல் எங்களை சித்தரிக்கின்றனர்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், எங்களை சமரசம் செய்ய லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கும் இடத்திற்கு மேலே, கட்ட இருந்த தடுப்பணையினை சற்று கீழே தள்ளி வண்ணான்துறையில் கட்டி அங்கிருந்து குடிநீர் எடுக்கின்றனர். இதன் மூலம் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறும் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் பகுதியில் வாழும் 4 லட்சம் பேருக்கு குடிநீர் தடையின்றி கிடைக்கும். மீதம் உள்ள 52 குடிநீர் திட்டங்களுக்கும் கோடை காலத்தில் கட்டாயம் பாதிப்பு ஏற்படும்.

வைகை அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் எடுத்தால் 60கி.மீ., துாரத்தில் தண்ணீர் மதுரைக்கு போய் விடும். தற்போது 154 கி.மீ., துாரம் கொண்டு செல்கின்றனர். இந்த திட்டத்திற்கான செலவு 1296 கோடி ரூபாயில் இருந்து தற்போதே 1320 கோடி ரூபாய் ஆக உயர்ந்து விட்டது. திட்டம் முடிவடையும் முன்னர் இந்த செலவு 1450 கோடி ரூபாயில் இருந்து 1500 கோடி ரூபாய் வரை உயர்ந்து விடும். இதன் மூலம் கிடைக்கும் கமிஷனுக்காவே இந்த திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்துகின்றனர். இந்த கமிஷன் பலருக்கும் சென்று சேருகிறது. குறிப்பாக தற்போது தடுப்பணை கட்டும் இடத்தில் நல்ல வலுவான தடுப்பணை கட்ட 70 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால் தடுப்பணைக்கு மட்டும் 18 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் இருந்தே இந்த திட்டம் கமிஷனுக்காகவே செயல்படுத்தப்படுகிறது என்பது புரிகிறது. ஆனால் நாங்கள் எதிர்ப்பதாக எங்கள் மீது பழி போடுகின்றனர். மதுரை மக்களுக்கு தடையின்றி தண்ணீர் தர வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.

இன்று நடந்த பூமிபூஜையில் ஆண்டிபட்டி, கம்பம் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. காரணம் அவர்களுக்கு முழுமையாக இந்த திட்டம் பற்றி தெரியும். அவர்கள் இந்த திட்டத்தை ஏற்கவில்லை. ஆனால் இதர அதிகாரிகள் உட்பட மேல்மட்ட நிர்வாகத்தில் பலருக்கு கமிஷன் கிடைக்கும் என்பதற்காக இந்த திட்டத்தை வீம்புக்காக செயல்படுத்துகின்றனர். தேனி மாவட்ட மக்கள் தங்களுக்கு எந்த மாதிரி பிரச்சினை வரும் என்பதை புரிந்து கொண்டு செயல்படாவிட்டால், அவர்கள் குடிநீருக்காக குடத்துடன் அலையும் காலம் வெகு விரைவில் வந்து விடும் என்பதே எங்கள் கவலை என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!