கம்பத்தில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் தோண்டி புவியியல் துறை பரிசோதனை
தேனி மாவட்டம், கம்பம் மெட்டு வனப்பகுதியில் ராட்சத எந்திரங்களின் மூலம் போர்போடப்பட்டு மண் வள பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரம் செறிந்த,நில வளம் மிகுந்த பகுதிகளில் ஒன்று தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு. முல்லைப் பெரியாறு பாயும் இந்த கம்பம் பள்ளத்தாக்கு, தமிழகத்தில் காவிரி, பவானிசாகருக்கு பிறகு மூன்றாவது பெரிய பாசனப்பரப்பை உள்ளடக்கிய ஒரு பரப்பாகும். இங்கு கார்ப்பனேட் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரிய உலோகங்களை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப் பணியை, ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை ஒரு காலக்கெடு விதித்து வேலையை செய்து கொண்டிருக்கிறது இந்திய புவியியல் ஆய்வு மையம்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக கம்பத்தில் ஒரு விடுதியில் தங்கி இருக்கும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தில் பணியாற்றும் மூன்று மண்ணியல் ஆய்வாளர்கள் (Geologist), கம்பம் மெட்டு அடிவாரத்தில் ஒரு தீவிரமான வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். 2.2 சதுர கிலோமீட்டர் பரப்பை அளவீடாகக் கொண்ட இந்த ஆய்வாளர்கள், 900 மீட்டர் ஆழத்தில், அதாவது 3000 அடி ஆழத்தில், செங்குத்தாக 15 ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் வேலையில் இறங்கியதோடு, நான்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் முடித்து விட்டார்கள்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்காக ராட்சத வண்டிகள் கம்பம் பள்ளத்தாக்குக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது. 3000 அடி ஆழத்திற்கு நாங்கள் துளை போடப் போகிறோம் என்றால் அது ஒரு சாதாரண ஆழமில்லை. ஒருவேளை இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் தேடுதலில், மிகவும் உயரிய கனிமங்கள் கிடைத்து விட்டால் அடுத்தபடியாக கம்பம் பள்ளத்தாக்கை என்ன செய்வதாக திட்டம்? இது குறித்த அனுமதி தமிழக அரசிடம் பெறப்பட்டுள்ளதா?
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் விஜயகுமார் பெயரில் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது அது உண்மை தானா?
தேனி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்று தான் இவர்கள் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்களா? வன வளமும், நில வளமும் மிகுந்த கம்பம் மெட்டை இந்திய புதிய ஆய்வு மையம் குறி வைக்க காரணம் என்ன?
தேனி மாவட்ட புவியியல் சுரங்கத்துறை இணை இயக்குநர் வினோத் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளிப்படுத்தாமல் செயல்படுவது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அறிவியலும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது தான் என்றாலும்,வளமிகுந்த பகுதிகளில் நாங்கள் ஆய்வுகளை மேற்கொள்ள போகிறோம் என்று கோட்டு சூட்டு போட்ட அதிகாரிகள் விளைநிலங்களை நோக்கி களம் இறங்கினால், நாட்டில் வாழும் 140 கோடி மக்களுக்கான உணவு ஆதாரத்திற்கு யார் உத்திரவாதம் அளிப்பது?
முல்லை பெரியாறு அணை கேரள சகோதரர்களால் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையமும் நெருக்கடி கொடுத்தால் கம்பம் பள்ளத்தாக்கு வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும். இந்த ஆய்வு குறித்த விவரங்களை அரசு விவசாயிகளுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் பூமியை தோண்டும் இடங்களில், விவசாய சங்க பிரதிநிதிகள் ஒன்று திரண்டு ஆய்வு வேலையை தடுத்து நிறுத்துவோம். எங்களுக்கு தற்போதைய தேவை- கம்பம் பள்ளத்தாக்குக்கான பாதுகாப்பு மட்டுமே. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu