தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
தேனி அல்லிநகரம் நகராட்சியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதாக சிவசேனா கட்சியும் புகார் எழுப்பி உள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில், துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளனர். இவர்களும் வேறு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். ( என்ன வேலை என நீங்களே புரிந்து கொள்ளுங்கள்). இந்த கடும் பணிச்சுமை காரணமாக பாவம் அப்பாவி நகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் அவுட்சோர்சிங் பணிகள் விடப்பட்டுள்ளது. இவர்களும் முறையாக பணி செய்வதில்லை. எனவே நகராட்சியில் குப்பை அகற்றுவது மிகவும் சவாலான பணியாக மாறி உள்ளது. மக்கள் குப்பைகளை கொட்ட முடியாமல் தவிக்கின்றனர். நகராட்சி துணைத்தலைவர் செல்வம் தலைமையில் கவுன்சிலர்கள் இந்த பிரச்னையை கமிஷனரிடம் கொண்டு சென்ற போது, அவர் அதனை அலட்சியம் செய்து விட்டார் என கவுன்சிலர்களே வெளிப்படையாக புகார் கூறுகின்றனர். எங்கள் முயற்சிகள் பலன் தரவில்லை. நகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றும் பணிக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் கடும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்து எழுச்சி முன்னணி உட்பட பல்வேறு சமூக அமைப்புகள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளன.

இந்நிலையில் இப்போது சிவசேனாவும் புகார் எழுப்பி உள்ளது. சிவசேனா மாநில துணைத்தலைவர் குருஅய்யப்பன் நகராட்சிக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக குப்பைகள்அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குப்பைகள் குவிந்த படியும், ஆடுகளும், மாடுகளும், நாய்களும் குப்பையை கிளறி வெளியே இழுத்தபடியும், குப்பைகள் எங்கும் பரவியுள்ளது. அள்ளப்படாத குப்பைகளின் மேல் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் உள்ளிட்டவைகள் மொய்க்கின்றன. இதனால், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளன.நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது சுகாதாரம்தான். அந்த சுகாதாரத்தின் முன்னோடியான முதல் வேலையான குப்பைகள் தேங்காமல் இருப்பதுதான்.எனவே மலை போல் குவிந்து கிடக்கின்ற குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பாகவும் சிவ சேனா கட்சியின் சார்பாகவும் கோரிக்கையாக முன் வைக்கப்படுகின்றோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story