அக்னி வீரர்களுக்கு இலவசம்: அள்ளித்தரும் முன்னாள் ராணுவ வீரர்கள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு ஒரு சிலரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும் நாடு முழுவதும் கிடைத்து வரும் ஆதரவு மத்திய அரசை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மத்திய அரசின் மூன்று படை பிரிவிற்கும் சேர்த்து ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற நிலையில், விமானப்படைக்கு மட்டும் இதுவரை விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வந்து சேரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் என பாதுகாப்புத்துறை கணித்துள்ளது. அந்த அளவு இளைஞர்களின் மத்தியில் இந்த திட்டத்திற்கு ஆதரவு உள்ளது.
இந்நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம், நெல்லை, விருதுநகர் என தென்மாவட்டங்களில் இருந்து யார் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்தாலும், அவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தை முன்னாள் ராணுவ வீரர்களும், நல்லோர் ராணுவ வீரர் கூட்டணியும் வழங்குவதாக அறிவித்துள்ளது. எந்த இ-சேவை மையத்திலும் அக்னிபத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டணத்தை இ-சேவை மையம் நல்லோர் ராணுவவீரர் கூட்டணியிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து தேனியை சேர்ந்த நல்லோர் ராணுவவீரர் கூட்டணி நிர்வாகி துரை கூறியதாவது: அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், ஒழுக்கத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்டு, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அவர்கள் உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டு பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் அமர்த்தி வைக்கப்பட உள்ளனர். இதற்காக ஒவ்வொருவரின் திறமையும் தனித்தனியே கண்டறியப்பட்டு, அவர்கள் எந்த துறையில் திறமை மிக்கவர்களாக உள்ளனரோ அந்த துறையில் உயர் கல்வி, பயிற்சி கொடுக்கப்பட்டு அதிகாரி பொறுப்பில் வரவும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் விண்ணப்ப கட்டணத்தை இலவசமாக செலுத்துவதுடன், (எத்தனை பேர் சேர்ந்துள்ளனரோ அதற்கான கட்டணத்தை அந்த இ-சேவை மையங்களுக்கு வழங்கி விடுவோம்) அவர்களுக்கு வேறு பல உதவிகள் தேவைப்பட்டாலும் வழங்குவோம். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu