இரட்டை இலை சின்னம் நிச்சயம் கிடைக்கும்.. உறுதியாக கூறும் முன்னாள் அமைச்சர்…
அதிமுகவின் இரட்டை இலை சின்னம். (கோப்பு படம்).
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலும் தனித்தனியே களமிறங்க தயாராகி வருகிறது. இதனால், அந்தக் கட்சிக்கு சொந்தமான இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று வருகிறது. அப்போது, இரட்டை இலை சின்னம் முடங்குமா? யாருக்கு கிடைக்கும் என்ற விவரம் தெரியவரும். இதுதொடர்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று, முதல் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். தேர்தல் களத்தின் முடிவு எப்படி வரப்போகிறது என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உலக அளவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் அத்தனை பேரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தேர்தலை பொறுத்தவரையில், ஒரு பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் தேர்தலாக அமையும். ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுக் கொண்டதாக இருக்கும். அந்த அளவுக்கு மக்களின் மனநிலை இருக்கிறது. இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கிக் காட்டும்.
அதுமட்டுமில்லாமல் அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை யார் இணையப் போகிறார்கள்? என்பதை பொதுச் செயலாளர்கள் அறிவிப்பார்கள். அனைவரும் அதிமுக அணி பிரிந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். 98.5 சதவீதம், எடப்பாடி தலைமையில் அணியில் ஒருங்கிணைந்து இருக்கிறோம். ஒரு சரித்திரம் படைக்கும் வெற்றியாக கிழக்குத் தொகுதி அமையும்.
களத்தில் எங்களின் வேகம், விவேகம் எப்படி இருக்கும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும். எங்களைப் பொறுத்தவரையில் இரட்டை இலை சின்னம் கிடைக்க முழு வாய்ப்பு இருக்கிறது. களப்பணியை பொறுத்தவரையில் அதிமுக என்றும் சோர்வடைவதில்லை.
இஸ்லாமியர்களுக்கு என்னென்ன பணிகள் நிறைவேற்ற வேண்டுமோ, மற்றவர்கள் நிறைவேற்றியதைக் காட்டிலும் நாங்கள் நிறைவேற்றுவோம். ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களுக்கு நிதி இல்லை என்றாலும், அரசு ஏற்று நிதி வழங்கியது. ரம்ஜான் நோன்பு வருகிறபோது, அவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்குவதற்காக அரிசி வழங்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu