பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதிக்குள் என்ன நடக்கிறது?

பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதிக்குள் என்ன நடக்கிறது?
X

கோப்புப்படம் 

கடந்த இருபது நாட்களுக்கு மேலாகவே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த காட்சியை சகித்துக்கொள்ள முடியவில்லை.

முன்பெல்லாம் இரவு நேரங்களில் தெரியும் அந்த காட்டு தீ, இப்போது பகலிலும் புகைமூட்டமாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், தேனி மாவட்டம் ,தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் என மேற்கு தொடர்ச்சி மலையடிவார மாவட்டங்களில் எல்லாம், பெரிய அளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தன்னுடைய ஆய்வறிக்கையை தெளிவுபடுத்தும் CEEW ஆற்றல் சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீருக்கான மன்றம் காலநிலை மாற்றத்தின் தீவிரம் காரணமாக ஏற்படும் பிரச்சினையே, காட்டுத்தீயாக உருவெடுக்கிறது என்று அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் தான், நிலை கொண்டிருப்பதாகவும் அது அறிவித்திருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் முன்பை விட பத்து மடங்கு கூடுதலாக காட்டுத்தீ ஏற்பட்டு இருப்பதாகவும், இனி இதை விட கூடுதலாக காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. காலநிலையில் ஏற்பட்டுவரும் அதிவேக மாற்றத்தால் கூடுதல் மற்றும் தீவிரமான காட்டுத்தீ அதிகம் உருவாகக்கூடிய இந்திய மாநிலங்களாக, ஆந்திரா, அசாம், ஒரிசா, மகாராஷ்ட்ரா,சட்டீஷ்கர் போன்ற மாநிலங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயின் வடு மறைவதற்கு முன்பே, அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறுவதைப் பார்த்தால் பயம் கலந்த அச்ச உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மேலை நாடுகளைப் போல காட்டுத் தீயை அணைப்பதற்கு தேவையான அதி நவீன உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில், இன்னமும் மரக்கிளைகளை உடைத்தே காட்டுத்தீ அணைக்கப்படுகிறது என்பது நமக்கான சாபக்கேடு.

பற்றி எரியும் காட்டுத் தீயால் அழிவது வெறும் மரங்கள் மட்டும் அல்ல, காட்டையே தஞ்சமென நினைத்து வாழும் லட்சக்கணக்கான உயிரினங்களும் தான் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஊர்வன, பறப்பன, நடப்பன என அத்தனை வகையான உயிரினங்களையும், அச்சமூட்டி எச்சரிக்கும் இந்த காட்டுத் தீ க்கு பின்னால் இருப்பது காலநிலை மாற்றம் என்பதும், அந்த மாற்றத்திற்குக் காரணமான உயிர், மனிதன் என்பதும், வெட்கக்கேடான விஷயமாக உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!