இரட்டை இலை சின்னம் யாருக்கு? விரைவில் வெளியாகும் தீர்ப்பு
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிக்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இரண்டு விதமான சிக்கல்களில் தடுமாறி வருவதாக தெரிகிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழலில், எந்த சின்னத்துடன் களத்தில் இறங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி சுப்ரீம்கோர்ட்டை எதிர்பார்த்து வருகிறது எடப்பாடி தரப்பு..
வரும் திங்கள்கிழமை முறையீடு செய்யுங்கள் என்று நீதிபதிகள் கூறிவிட்ட நிலையில், அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள். எனினும் இலை கிடைக்காத நிலையில், சின்னம் குறித்த ஆலோசனைகள் நடந்தபடியே உள்ளன.. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று தனது பலத்தை நிரூபித்தது போல, தங்களுடைய அணியும் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஏற்கனவே ஜெயலலிதா "சேவல்" சின்னத்தில் போட்டியிட்டதால் எடப்பாடி அணியினர் சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்தனர். ஆனால், பறவைகளை சுயேட்சை சின்னமாக ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தற்போது நிறுத்தி விட்டது. அதனால் சேவல் சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைக்காது. இதையடுத்துதான், எடப்பாடி அணியினர் "புல்லட்" சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தை அணுக ஆயத்தமாகி வருகின்றனர்.
புதிய சின்னம் என்பதால், இதற்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற கலக்கமும் எடப்பாடி தரப்பிடம் கவ்வி வருகிறதாம். பெஸ்ட் சாய்ஸ் அதேபோல, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று நேற்று முதல் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார். அந்த ஆலோசனை இன்றும் தொடர்கிறது. அந்த வகையில் 3 பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. தென்னரசு, ராமலிங்கம், நந்தகுமார் ஆகிய 3 பேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாம். இந்த 3 பேரில் ஒருவரே களமிறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாகவே ராமலிங்கம் பெயர்தான், பிரதான சாய்ஸாக இருந்து வருகிறது. ராமலிங்கம் சீனியர் என்றாலும், அவர் சற்று தயக்கம் காட்டினாராம். அதனால், போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் இருந்ததாக தெரிகிறது.
ஆனால், தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக்கொள்ளும் என்று எடப்பாடி தரப்பு கூறியதையடுத்து, அவர் சம்மதம் தெரிவித்ததாக 2 நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தன. எனினும், வேட்பாளர் தேர்வில் தொடர் ஆலோசனைகள் 2வது நாளாக நீடித்து வரும் நிலையில், 3 பேரின் பெயர்கள் அதில் அடிபட்டுள்ளன.
அந்தவகையில், ராமலிங்கத்தைவிட, முன்னாள் எம்எல்ஏவான தென்னரசு போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவர் தற்போது மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாரளாக இருக்கிறார். எனினும், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் அல்லது மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார் ஆகியோரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.. எதுவானாலும் வேட்பாளர் யார் என்பது குறித்த பரபரப்புகள் அதிமுக கூடாரத்தில் எகிறி வருகின்றன.
இந்நிலையில், எடப்பாடி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் இரட்டை இலை கேட்டு தாக்கல் செய்த இடைக்கால மனுவின் தீர்ப்பினை பொறுத்து எதிர்காலம் அமையும். இதற்கிடையில் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பே வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முன்னதாக வந்து விடும் வாய்ப்புகளும் உள்ளன என சுப்ரீம் கோர்ட்டில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் எடப்பாடி தரப்பு மிகுந்த பரிதவிப்பில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu