தோட்டக்கலை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் தேனி விவசாயி
பைல் படம்
Latest Agriculture News -தேனி உழவர்சந்தைக்கு காய்கறி வாங்க வரும் அத்தனை பேருக்கும் விவசாயி பாலகுருவை பற்றி தெரிந்திருக்கும். அவர் சுறுசுறுப்புடன் வியாபாரம் நடத்தும் விதமும், மக்களுக்கு அள்ளி வழங்கும் விதமும் அத்தனை பேருக்குமே பிடித்திருக்கும். இன்று பல லட்சங்களுக்கு அதிபதியாக இருக்கும் பாலகுரு சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறிய வீட்டில் ஆட்டுக்கொட்டகைக்குள் குடித்தனம் நடத்தியவர். அந்த அளவுக்கு ஏழ்மை அவரது வாழ்க்கையில் விளையாடியது.
உழைப்பினை மட்டுமே நம்பிய பாலகுரு, தேனி வீரப்ப அய்யனார் கோயில் மலை அடிவாரத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கொத்தமல்லி தழை, கீரை வகைகளை சாகுபடி செய்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி தேனியில் உழவர்சந்தையினை திறந்தார். பாலகுரு விளைவித்த காய்கறிகளை உழவர்சந்தையில் விற்பனை செய்ய இடம் கிடைத்தது. தான் விளைவித்த காய்கறிகளை நேரடியாக சந்தையில் விற்பனை செய்தார்.
அப்போது தான் பாலகுரு வாழ்க்கை மாறியது, கையில் பணம் புழங்க தொடங்கியது. வீரப்ப அய்யனார் கோயில் மலையடிவாரத்தில் இவர் குத்தகைக்கு எடுத்திருக்கும் நிலம் மிகவும் வளமான நிலம். எனவே உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாலகுரு பயன்படுத்தவில்லை. இயற்கை முறையில் காய்கனிகளை விளைவித்தார். தவிர தான் சாகுபடி செய்யும் அத்தனை கீரை வகைகள், காய்கனிகளுக்கு விதைகளை தானே தயாரித்தார். இதன் நுட்பத்தையும் கற்றுக்கொண்டார்.
இதன் மூலம் பூச்சிமருந்து தெளிக்காத, உரம் இடாத கீரை, காய்கறிகள் என பாலகுரு விற்க தொடங்கியது உழவர்சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. இவரை பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் தேடி வந்தனர். அவர்களை தனது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தனது சாகுபடி முறைகளை பற்றி பாலகுரு விளக்கம் அளித்தார். தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாலகுரு பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி மாணவிகளுக்கு செயல் விளக்க திடல் பாடம் நடத்தி வருகிறார். வழக்கமாக தோட்டக்கலை, வேளாண்மை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்க திடல் பாடத்திட்டங்கள் உண்டு. இந்த பிரிவில் மாணவ, மாணவிகள் தற்போதைய வேளாண்மை சூழல் பற்றி அறிந்து கொள்ள பாலகுருவை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவர் கையாண்ட அத்தனை சாகுபடி முறைகளும் நமது பாரம்பரிய சாகுபடி முறைகள். அதில் அதிக விளைச்சலையும் எடுத்து காட்டினார். நேரடியாக உழவர்சந்தையில் விற்பனை செய்து வருவாயினையும் பெருக்கினார். வருமானம் பெருகும் போதே, பாலகுரு ஒரு முக்கிய முடிவு எடுத்தார். அதன்படி தினசரி வருமானத்தில் ஒரு பகுதி கோயிலுக்கு, ஒரு பகுதி தான தர்மத்திற்கு வழங்கினார். தேனியில் உள்ள ஒரு தனியார் காப்பகத்திற்கு தேவையான கொத்துமல்லி, கருவேப்பிலை, கீரைகள் என தான் விளைவிக்கும் பொருட்களில் ஒரு பகுதியினை 15 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக வழங்கி வருகிறார். அரசு சத்துணவுக்கூடங்களுக்கு ஒரு பகுதியையும், கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்களுக்கு ஒரு பகுதியையும் வழங்கி வருகிறார்.
இப்படி இவர் தானதர்மம் செய்வது அதிகரிக்கும் நிலையில், இவரது வருமானமும் அதிகரித்தது. வந்த வருவாயினை மீண்டும் மீண்டும் விவசாயத்திலேயே முதலீடு செய்தார். சொந்தமாக நிலம் வாங்கினார். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த இவரிடம், தற்போது பல ஏக்கர் நிலம், டிராக்டர், ஆடு, மாடுகள் என பெரும் செல்வம் சேர்ந்துள்ளது. ஆனால் அன்று இருந்ததை போல் தான் இன்றும் மாறாமல் இருக்கிறார். தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் விவசாய பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார். இவ்வளவு பணம் இருந்தும் தினமும் இரண்டு வேளை மட்டுமே பாலகுரு சாப்பிடுகிறார்.
அதுவும் ஒரு வேளை உணவு மோர் கலந்த பழைய சோறு மட்டுமே. கோயில் கும்பாபிஷேகத்திற்கு பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூட இவரை தேடி வருகின்றனர். தவிர பல ஏழை பெண்களின் திருமணத்திற்கும், ஆதரவற்ற பெண்களி்ன் திருமணத்திற்கும் கூட உதவிகள் செய்து வருகிறார். இது பற்றி வெளியே யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்வதில்லை. தற்போது உழவர்சந்தை அருகிலேயே கடை பிடித்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்தி உள்ளார். முழுக்க, முழுக்க உழைப்பு, உழவர்சந்தை என மட்டுமே வாழும் பாலகுருவிற்கு தற்போது வரை விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உழவர்சந்தை திட்டம் பல நுாறு விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் வாழ்வு பெற்ற பாலகுரு, தான் சார்ந்த சமூகத்திற்கும் சேவை செய்வது அப்பகுதி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றால் மிகையில்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu