தேனியில் அகதியாக வந்த உயர் வகுப்பு நாய்க்கு அடைக்கலம் கொடுத்த தெரு நாய்

தேனியில் அகதியாக வந்த உயர் வகுப்பு நாய்க்கு  அடைக்கலம் கொடுத்த தெரு நாய்

தேனி ரயில் நிலையம் அருகில் உயர் வகுப்பு  நாய்க்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வரும் தெருநாய். 

தேனி ரயில் நிலையம் அருகில் அகதியாக வந்த உயர் வகுப்பு நாய்க்கு ஒரு தெருநாய் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.

தெருநாய்கள் பிரச்சினை இன்று தமிழகம் முழுவதும் உள்ளது. நாய்களை பைரவரின் வாகனம் என பலர் வழிபட்டாலும், தெரு நாய்களை ஏற்க யாரும் தயாராக இல்லை. தெருநாய்களும் கண்டதை தின்று, உடல் நலத்தை கெடுத்து, சுற்றி வந்து நோயை பரப்பி வருகின்றன. தேனியில் எந்த தெருவிற்கு சென்றாலும் நாய் கூட்டத்தை பார்க்கலாம். இரவில் தேனியில் தெருக்களில் நடந்து செல்வது சிரமம் நிறைந்த விஷயம் தான் என்கிற அளவு தெருநாய்களின் தொல்லை உள்ளது.

அதுவும் தேனியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள தெருவில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. இந்த தெருவில் உள்ள பலர் தெருநாய்களுக்கு தினமும் உணவு, தண்ணீர் அளிக்கும் வழக்கம் உள்ளவர்கள். இதனால் தான் இங்கு நாய்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் ரயில்வே ஸ்டேஷன் முகப்பில் பல நாய்கள் உள்ளன.

ஒரிரு நாட்களுக்கு முன்னர் ஒரு வயதான கருப்பு நிற நாயை யாரோ கொண்டு வந்து ரயில்வே ஸ்டேஷன் அருகில் விட்டு விட்டு சென்று விட்டனர். அந்த நாயை பார்த்தாலே தெரிகிறது. மிகவும் உயர்ரக நாய். அதுவும் மிகவும் வசதியான வீட்டில் வாழ்ந்த நாய். தற்போது வயதாகி விட்டதாலும், நோயின் பிடியில் சிக்கியிருப்பதாலும், உடல் பலமிழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த நாயை வளர்த்தவர்கள் இரக்கமே இல்லாமல் இங்கு கொண்டு வந்து விட்டுச் சென்று விட்டனர். வயது மூப்பு, நோய் தாக்குதல் உள்ள சூழலில் வளர்த்த, பாதுகாத்த உறவுகளையும் இழந்த அந்த நாய் கண்ணீர் வடித்தபடி இந்த ரயில்வே ஸ்டேஷனை சுற்றி வந்தது. ஆமாம் நாய் அழுததை பலரும் பார்த்துள்ளனர்.


தேனியை சேர்ந்த சமூக சேவகரும், நகராட்சி முன்னாள் கவுன்சிலரும், அரசியல்பிரமுகருமான பெத்தாட்ஷி ஆசாத் இது தொடர்பாக கூறும்போது தேனியில் தெருநாய்களுக்கு உணவு வைக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதாவது பழைய சோறு, வீட்டில் மீதமான பொருட்களை நாய்க்கு போடுவார்கள் என நினைக்காதீர்கள். தனது வீட்டில் என்ன சமைத்தாலும், சற்று அளவு கூடுதலாக செய்து நாய்களுக்கு போடுபவர்கள் பலர் உள்ளனர். (ஒரு இடைச் செருகல்: தேனியை சேர்ந்த பசுமை சிவக்குமார், தேனி மேலப்பேட்டை இந்த நாடார் உறவின் முறை துணைத்தலைவர் பி.பி.கணேஷ் இவர்கள் தினசரி நாய்க்கு உணவு வைக்கும் பழக்கம் உள்ளவர்கள். பிஸ்கெட், சாதம், ரொட்டி, சில நேரங்களில் பக்குவமாக சுத்தமாக வேக வைக்கப்பட்ட இறைச்சி வழங்குவார்கள். இது போல் பலர் உள்ளனர் என தேனி மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம் நாடார் கூறினார்.). நான் (பெத்தாட்ஷி ஆசாத்) தினமும் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள நாய்களுக்கு உணவு வழங்குவேன். நான் ஒரு வேளை உணவு மட்டும் தருவேன். பலர் காலை, மதியம், மாலை, இரவு என உணவு வழங்குகின்றனர். இப்படி பலர் தெருநாய்களுக்கு உணவு வழங்கி பாதுகாத்து வருகின்றனர்.

இந்த சூழலில் அந்த பணக்கார வீட்டு கருப்பு நாய் அங்கு இருந்ததை நான் கண்டேன். அந்த பகுதியில் உள்ள தெருநாய் கூட்டம் அந்த கருப்பு நிற நாயை குரைத்து விரட்டின. அப்போது அங்கிருந்த ஒரு தெருநாய் குரைத்த நாய்களை விரட்டி அந்த வயது முதிர்ந்த கருப்பு நிற நாயை பாதுகாத்தது. அதன் பின்னர் நான் எனது வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு அந்த நாயை கண்காணித்தேன். அகதி போல் வந்த கருப்புநிற நாயை, தெரு நாய் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததை போல் பாதுகாத்து வருவதை பார்த்து நான் மிகவும் ஆச்சர்யப்பட்டு போனேன். நாய்களின் இந்த மனிதநேயம், உறவுகளை மதிக்கும் பண்பு, உறவுகளை இழந்ததால் தவிக்கும் அந்த நாயின் பரிதவிப்பு என எல்லா விஷயங்களும் என் மனதை உலுக்கி விட்டது.

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், அந்த நாய்க்கு வயதாகி விட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ நாய்களை பராமரிக்கும் மையத்தில் கொண்டு போய் கூட சேர்த்து விடலாம். இது போல் தெருவில் விட்டுச் செல்ல வேண்டாம். இதனை எனது வேண்டுகோளாக வைக்கிறேன் என்றார்.

Tags

Next Story