திங்கட்கிழமை குமுளி முற்றுகை..! பெரியாறு விவசாயிகள் அறிவிப்பு..!
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.
1979 ஆம் ஆண்டு ஆரம்பித்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை பல்வேறு கட்ட சீர்திருத்தங்களுக்கு பிறகும், இன்னும் ஓய்ந்தமாடில்லை. எப்படியாவது முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கேரளத்து அரசியல்வாதிகள்.
உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கிய பிறகும் ஒரு கட்டுக்குள் வர மறுக்கிறது கேரள மாநில அரசு. 2011 ஆம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கில் நடந்த முல்லைப் பெரியாறு பேரெழுச்சி கேரளத்தை அச்சம் கொள்ளச் செய்தாலும், அப்போது பின்வாங்கியவர்கள் தற்போது மீண்டும் பெரியாறு அணைக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்கள்.
மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை எப்படியாவது பணிய வைத்து முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
வரலாற்றின் வழிநெடுகிலும் முல்லைப் பெரியாறு போராளிகள் நடத்திய போராட்டங்கள் ஒருபோதும் நீர்த்துப் போகப் போவது இல்லை. வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மறுபடியும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப் போகிறோம் என்று களத்திற்கு வந்திருக்கிறது பினராயி விஜயனின் இடதுசாரி அரசு.
இந்த முறை உச்சக்கட்ட அறவழி தாக்குதலை கேரளா மீது நாங்கள் நடத்தத் தயாராகி வருகிறோம். ஜனநாயகத்தை மதிப்பவர்கள் என்கிற நிலையில் எத்தனை நாளைக்கு தான் நாங்கள் அடங்கிச் செல்ல முடியும்? இன்று காலை 10 மணியிலிருந்து போராட்டத்திற்கான யுக்திகளை வகுக்கிறோம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளாவுடன் எங்களுடைய அறப்போர் தொடங்கியதாகவே அர்த்தம் கொள்ளலாம்.
ராமநாதபுரம் சிவகங்கை மதுரை, திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு உணர்வாளர்கள் வரும் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் லோயர் கேம்பில் உள்ள கர்ணன் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் முன்பாக கூடி அங்கிருந்து பேரணியாக குமுளியை நோக்கி செல்வதற்குத் தயாராக வேண்டும். அனைத்து விவசாய சங்கத் தலைவர்களும் திங்கட்கிழமை காலை குமுளி வந்தடைவார்கள்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, *அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க பொறுப்பாளர் அண்ணன் சிதம்பரம் ரவீந்திரன், மற்றும் அனைத்து விவசாய சங்க தலைவர்களும் வரவிருப்பதால் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்படுவார்கள்.
இந்த முறை எங்கள் பலத்தை நிரூபித்து காண்பிப்போம். முல்லைப் பெரியாறு அணை எங்கள் உயிருடன் கலந்த ஒன்று. அதன் மீது கை வைக்க இந்த பினராயி விஜயன் அல்ல எந்த பினராயி விஜயன் வந்தாலும் நடக்காது. தேனி ஜெயபிரகாசு நாராயணன், சின்னமனூர் ராமமூர்த்தி, சீலையம்பட்டி சேகர் உள்ளிட்ட மூன்று போராளிகள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண் போகாது.
முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க அறப்போர் தொடங்கியுள்ளது. நமது நிர்வாகிகள் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள முல்லைப் பெரியாறு விவசாய சங்க தலைவர்கள் உணர்வாளர்கள் அத்தனை பேரையும் அணி திரட்டும் வேலையை இன்றே தொடங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu