தென்னிந்தியாவை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்..!

தென்னிந்தியாவை அதிரவைத்த   விவசாயிகளின் போராட்டம்..!
X

பெரியாறு அணையினை பாதுகாக்க லோயர்கேம்பில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள்.

விவசாயிகள் போராட்டத்தை நிருபர்கள் கையாண்ட விதம், தென்னிந்தியா முழுவதும் இப்பிரச்னையை பேசு பொருளாக மாற்றி விட்டது.

கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையினை இடித்து விட்டு புதிய அணை கட்டப்போவதாக தெரிவித்துள்ளது. இதற்கான முன்முயற்சிகளிலும் ஈடுபட்டது. தமிழக விவசாயிகளை கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கோபமடையச் செய்தது. கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தலைமையில், நேற்று குமுளியை முற்றுகையிட்டது.

இந்த போராட்டத்தை நடத்தவே விவசாயிகள் பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஐந்து மாவட்ட விவசாயிகளையும், தமிழகத்தின் விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து போராட்டம் நடத்த பெரும்பாடு பட்டனர். ஒருபுறம் போலீஸ் நெருக்கடி, மறுபுறம் கழுத்தை நெறிக்கும் பொருளாதார நெருக்கடி, ஒருங்கிணைப்பதில் உள்ள பிரச்னைகள், தமிழக, கேரள அரசுகளின் கோபம் இப்படி பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

இதனை நேரடியாக பார்த்த தேனி மாவட்டத்தில் உள்ள பல நிருபர் சங்கங்கள் இந்த முற்றுகை போராட்டத்திற்கு தங்களின் வெளிப்படையான ஆதரவை வழங்கின. நீங்கள் போராட்டம் நடத்துங்கள். நாங்கள் அதனை செய்தி வழியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம். தேவைப்பட்டால் உங்களுடன் போராட்ட களத்திற்கு கூட வருவோம் என பகிரங்கமாகவே அறிவித்தனர்.

இதனை அறிந்த தமிழக நிருபர்களின் கவனம் தேனி மாவட்டத்தை நோக்கித் திரும்பியது. தமிழகத்தை சேர்ந்த பல செய்தி சேனல்கள் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடுகளை செய்து விட்டன. இப்படி பரவிய விஷயம் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என அத்தனை மாநிலங்களுக்கும் பரவியது. குறிப்பாக இந்த தென் மாநிலங்களை சேர்ந்த நிருபர்கள் தேனி மாவட்ட நிருபர்களை தொடர்பு கொண்டு என்ன பிரச்னை என விரிவாக கேட்டனர். தேனி மாவட்ட நிருபர்களும் சளைக்காமல் விளக்கினர்.

உடனே எங்களுக்கு படம், செய்தி, வீடியோ அனுப்புங்கள் என கேட்டனர். இவர்களும் அனுப்பி வைத்தனர். கேரள நிருபர்கள் நேரடியாக செய்தி சேகரிக்க போராட்ட களத்திற்கே வந்து விட்டனர். அத்தனை நிருபர்களும் என்ன நடந்ததோ அதனை முழுமையாக வெளிப்படுத்தினரே தவிர, ஒரு துளி அளவு கூட கூடுதலாகவோ, குறைச்சலாகவோ தகவலை வெளிப்படுத்தவில்லை. ஐந்து மாநில செய்தி சேனல்கள், டிஜிட்டல் மீடியாக்கள், விஷூவல் மீடியாக்கள், யூடிபர்கள் என அத்தனை பேரும், இந்த செய்தியை ஒளிபரப்பு செய்தனர்.

பல டி.வி., சேனல்கள் விவாதமேடை அமைக்கும் அளவு இந்த பிரச்னை தென்னிந்திய மாநிலங்களின் கவனத்தை பெற்று விட்டது. ஆக மொத்தத்தில் தேனி மாவட்ட நிருபர்கள், பெரியாறு வைகை பாசன விவசாயிகளின் போராட்டத்திற்கு செய்தி வழியாக தங்களது ஆதரவை வழங்கியது மட்டுமின்றி, இந்த செய்தியை தென்னிந்தியா முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்து தங்களது பலத்தையும் காட்டி விட்டனர். இதன் பலன் கடும் நெருக்கடிகளை கடந்து போராடிய விவசாயிகளின் மனங்கள் குளிர்ந்து விட்டன. இனிமேல் நமக்கும் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது துாணின் ஆதரவு உள்ளது என்ற ஒரு நம்பிக்கையினை பெற்றுத்தந்துள்ளது.

விவசாயத்தைக் காப்பதற்கு நாமு ஏதாவது செய்துதானே ஆகவேண்டும்?!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!