குமுளியை முற்றுகையிட வரிந்து கட்டும் தமிழக விவசாயிகள்
பெரியாறு அணை பைல் படம்.
முல்லைப்பெரியாறு அணையினை இடித்து விட்டு, புதிய அணை கட்ட கேரளா திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. கேரளாவின் இந்த செயல்பாடு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க வலியுறுத்தி நாளை குமுளியை முற்றுகையிடப்போவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பினை ஏற்று பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேனிக்கு வந்து கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு கள் இயக்க நிறுவனர் வக்கீல் செ.நல்லசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க பொதுச் செயலாளர் சிதம்பரம் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன்முருகசாமி, கனிமவள கொள்ளைக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் இயற்கை வள பாதுகாப்பு இயக்க நிர்வாகி கம்பூர்செல்வராஜ், அகரத்தமிழர் கட்சி நிறுவனர் குயிலி நாச்சியார், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிர்வாகி முகிலன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை பொதுச் செயலாளர் நேதாஜி, தேவேந்திர இளைஞர் பேரவை நிறுவனர் அழகர்சாமிபாண்டியன் உட்பட பலர் தேனிக்கு வந்து கொண்டுள்ளனர்.
அதேபோல் பெரியாறு, பாசன விவசாயிகள் அழகர்சாமி, பாண்டியன் ஆகியோர் தலைமையில் ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகளும், வெள்ளநாட்டு பெரியாறு பாசன விவசாயிகளும் வந்து கொண்டுள்ளனர். சிவகங்களை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகளும் பங்கேற்க உள்ளனர். தேனி மாவட்டத்திலும் பல நுாறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டக்களத்திற்கு தயாராகி வருகின்றனர். இவர்கள் நாளை காலை லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு கூடுகின்றனர். அங்கிருந்து குமுளி நோக்கி ஊர்வலமாக புறப்படுகின்றனர்.
நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்றே தேனி மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. லோயர்கேம்ப்பிலும், குமுளி தமிழக பகுதியிலும் தமிழக போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகின்னறர். கேரள அரசின் தரப்பிலும், குமுளி கேரள பஸ்ஸ்டாண்டினை ஒட்டி போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu