அமைச்சர் துரைமுருகனுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் பகிரங்க கடிதம்

அமைச்சர் துரைமுருகனுக்கு  ஐந்து மாவட்ட விவசாயிகள் பகிரங்க கடிதம்
X
முல்லை பெரியாறு அணையினை பார்வையிட வருகை தரும் அமைச்சர் துரைமுருகனுக்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் வரவேற்று கடிதம் எழுதி உள்ளனர்.

மாண்புமிகு தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் அண்ணன் திரு துரைமுருகன் அவர்களுக்கு, ஐந்து மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒரு மனந்திறந்த மடல்...

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் விட்டுக்கொடுத்த உரிமைகள் என்னவெல்லாம் என்று எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்... பெரியாறு அணை குறித்த உங்களின் பார்வையும் விசாலமானது.

ஒரு விஷயத்தை எளிதில் உள்வாங்கக் கூடிய தன்மை பெற்ற தாங்கள்,கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பெரியாறு அணையில் நடந்த நிகழ்வுகளை கண்ணுற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ச்சியாக 42 ஆண்டுகளாக தமிழகம் பெரியாறு அணையில் கேரளாவால் வஞ்சிக்கப்பட்டு கிடக்கிறது என்பது தாங்கள் அறியாததல்ல.

அப்படியிருந்தும் தமிழக அதிகாரிகளை மையப்படுத்தி, கேரள மாநில அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அணைக்குள் நுழைந்து நடத்திய அரசியல் என்பது எங்களால் மட்டுமல்ல உங்களாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் 126 ஆண்டுகளாக, முல்லைப் பெரியாறு அணை திறப்பு விவகாரத்தில் தமிழகம் கடைப்பிடித்து வந்த மரபை, போகிற போக்கில் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது கேரளா.

கடந்த இரண்டு மாதங்களாக கேரளா முழுவதும் சமூக வலைதளங்களில் #Decommission mullaperiyar# என்கிற முழக்கத்தை முன்வைத்து மலையாள சகோதரர்கள் நடத்திய விஷமப் பிரச்சாரம் உங்கள் பார்வைக்கு வந்திருந்தால், கண்டிப்பாக கேரளத்து அமைச்சர்களை அணைப் பகுதிக்குள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள்...

கேரள நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் இடுக்கி சட்டமன்ற உறுப்பினரான திரு ரோசி அகஸ்டீன், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கடந்த காலங்களில் நடத்திய நிகழ்வுகளை பட்டியலிட்டால், வரலாறு தாங்காது. கேரளாவில் வேறெவரையும் விட முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் இன்றளவும் முன்னணியில் இருப்பவர் திரு ரோசி அகஸ்டின்.

எந்த அணையை உடைக்க வேண்டும் என்று காலங்காலமாக குரல் கொடுத்தாரோ, அந்த அணைக்குள்ளேயே வந்து அணைத்திறப்பில் அவர் பங்கு கொண்டது ஆற்றொணாத் துயரமும் எங்களுக்கு. எங்களை தூங்கவிடாமல் செய்யும் சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

எப்போதும் பெரியாறு மற்றும் வைகை அணை திறப்பில் உரிமையோடு பங்குகொள்ளும் தேனி மாவட்ட ஆட்சியர் கடந்த 29ஆம் தேதி பெரியாறு அணை திறக்கும் போது எதனால் அழைக்கப்படவில்லை?

பெரியாறு அணையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்றால் பொறுப்புள்ள தாங்கள் யாரை அழைத்து முதலில் விசாரிப்பீர்கள்?.

பாதுகாக்கப்பட்ட அணையான பெரியாறு அணைக்குள் வைக்கப்பட்டிருக்கும் நுழைவு பதிவேட்டில் சட்டப்படி கையெழுத்துப் போட கேரள அமைச்சர்களுக்கு உரிமை இருக்கிறதா...?

பெரியாறு அணை 136 அடியை எட்டும் போது பெரியாறு அணையில் இருக்கும் பொறியாளர்கள் விடுத்த, முதல் எச்சரிக்கை எந்த அடிப்படையில் விடுக்கப்பட்டது? அப்போது விடுக்கப்பட வேண்டியது தகவலா அல்லது எச்சரிக்கையா...?

உச்ச நீதிமன்றம் கடந்த 29ஆம் தேதி 9:30 மணி அளவில் முல்லைப் பெரியாறு அணையில் 139.5 அடி நீரை நவம்பர் 11ஆம் தேதி வரை தேக்கலாம் என்று உத்தர விடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, முல்லைப் பெரியாறு அணை இருபத்தி ஒன்பதாம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று கேரள மாநிலம் செய்த அறிவிப்பு எந்த அடிப்படையில் என்பதை தாங்கள் தான் எங்களுக்கு விளக்க வேண்டும்.

இருபத்தி ஏழாம் தேதி காலையிலேயே இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு கரையோர மக்களுக்கு,ஜீப்களில் மிகப்பெரிய ஒலிவாங்கி களைகட்டி எச்சரிக்கை விடுத்தது எந்த அடிப்படையில்...?

காலங்காலமாக பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பவர்கள் எந்த மனநிலையில் அந்த அணைக்குள் வந்திருப்பார்கள் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது உங்களால் புரிய முடிகிறதா அண்ணன்...?

அணையின் நீர்மட்டத்தை குறித்து அங்கு தங்கியிருந்து பார்வையிடவேண்டிய தாங்கள் அங்கு இல்லாத நிலையில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் திரு ரோசி அகஸ்டின் தேக்கடியில் உள்ள ஆரண்ய நிவாஸில்,தங்கிக்கொண்டு அணையை பார்வையிட காலையிலேயே வருவது எந்த மரபின்படி...?

அணையை நினைத்த நேரத்தில் திறப்பதும் அடைப்பதும் கேரள மாநிலத்தின் கையில் என்றால் நீங்கள் பத்திரிக்கைகளில் கொடுத்த அறிக்கை பொய்யா அண்ணன்...?

அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அனுதினமும் அணையில் உலாவிக் கொண்டு இருப்பது கேரளத்து அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் என்றால், அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கடந்த 25ஆம் தேதி கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான திரு வி.டி. சதீசன் அவர்கள் முல்லைப் பெரியாறு அணை குறித்து எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன் அளித்த பதிலின் நகல் உங்களுக்கு கிடைத்ததா இல்லையா?

கேரள மாநில மக்களின் நலன் முக்கியம் என்று அம்மாநில அரசு நினைத்தால், முதலில் திறக்க வேண்டியது 74 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையை என்பதை தாங்கள் அறிவீர்களா?

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது அது குறித்து கவலைப்பட வேண்டாம்,அணை குறித்து தவறாக பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 26 ஆம் தேதி அறிக்கை விட்ட கேரள மாநில முதல்வர்,அடுத்த இரண்டு நாட்களில் அதாவது இருபத்தி ஒன்பதாம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அணை பலவீனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்..

கேரள மாநில முதல்வரின் இந்த உள் அரசியலை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா அண்ணா...!

அணை குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை என்று அறிவித்த கேரள மாநில முதல்வர், இதுவரை ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...!

இன்னும் கூடுதலாக எழுத ஆசைதான் ஆனால் அதைப் படிக்கக் கூடிய மனநிலை உங்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐந்தாம் தேதி அணையை பார்வையிட நீங்கள் வருகிறீர்கள் என்கிற செய்தி உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி தான். அதை கண்டிப்பாக நாங்கள் வரவேற்கவே செய்கிறோம்...

ஆனால் நடந்துவிட்ட உரிமை மீறலை எப்படி சரி செய்யப் போகிறீர்கள் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு.

கேரள முதல்வர் நல்லவர் என்று நீங்கள் புரிந்திருந்தால் பேபி அணைக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கும் அந்த 23 மரங்களை வெட்டுவதற்கு இந்த பயணத்திலேயே அனுமதி பெற்று விடுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழக அரசு சம்பளம் கொடுத்து, கூலிக்கு வேலை செய்யும் கேரளத்து காவலர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை காணவும் ஆவலாக இருக்கிறோம்.

செல்வது தேக்கடி படகு குழாம் வழியில் என்று நினைக்கிறோம் கண்டிப்பாக திரும்பி வரும்போது வல்லக்கடவு வன சோதனைச்சாவடி வழியாக வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

42 ஆண்டுகளாக முல்லையாற்றுத் தண்ணீரையே பார்க்க முடியாமல் தவிக்கும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடைக்கோடி பகுதி விவசாயிகள் உங்களுடைய பயணத்திற்காக காத்திருக்கிறோம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அணையின் நீர்மட்டம் 139.5 அடியாக இருந்தால் கூட, உரிமை நம்மிடம் தான் உள்ளது என்பதை நிரூபிக்க தாங்கள் வருவதே பெரிய பாக்கியம்...

தயவுசெய்து உங்களுடைய பயணத்தில் கேரளத்து அமைச்சர்களை இணைத்துக் கொள்ள வேண்டாம். அது தங்களுடைய பயணத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும்...

கூடுதலாக அணைக்குள் நீங்கள் செல்லும்போது விவசாய சங்க பிரதிநிதிகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைக்கிறோம்.

நன்றி அண்ணா

எஸ்.ஆர்.தேவர்-தலைவர்.

இ.சலேத்து-முதன்மைச் செயலாளர்.

பொன் காட்சி கண்ணன்- செயலாளர்.

எஸ்.பி. லோகநாதன்- பொருளாளர்.

ச.அன்வர் பாலசிங்கம்- ஒருங்கிணைப்பாளர்.

ஐந்து மாவட்ட விவசாய சங்கம்

தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!