காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்ற தேவாரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை

காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்ற தேவாரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை

யானை (கோப்பு படம்)

காட்டு யானைகளிடமிருந்து காப்பாற்ற தேவாரம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காடுகளை வளமாக வைத்திருப்பதில் யானைகளின் பங்கு மகத்தானது நாடுகள் வளமாக இருப்பதற்கு காடுகளின் பங்கு முக்கியமானதாக இருப்பதால் தான் யானையை மனிதன் வணங்குகிறான்.

ஆனால் கையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலத்தில் அரும்பாடு பட்டு போட்டு வளர்த்திருக்கும் தென்னை மரத்தையும், பாக்கு மரத்தையும், விவசாயப் பயிர்களையும், அதே யானை அடித்து பிரித்து எறியும்போது வருத்தம் மட்டுமல்ல வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகின்றது, ஒரு சாமானிய விவசாயிக்கு.

முறையிட வேண்டிய இடத்தில் எப்படி முறையிடுவது என்று தெரியாமல் ஒரு கூட்டமும், முறையிட்டால் கூட நடவடிக்கை இல்லையே என்று பரிதவித்து நிற்கும் ஒரு கூட்டமும் தான், இந்த நாட்டிற்கு உணவு தருபவர்கள்.

கோம்பை முதல் ராசிங்கபுரம் வரையிலான வன பகுதிகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஐந்து யானைகளில், இரண்டு யானை மேலேயே தங்கி விடுகிறது. இதில் மூன்று யானைகள் மட்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து தங்களுக்கு தேவையான உணவை சேகரிக்கிறோம் என்கிற பெயரில் அப்பாவிகளின் வாழ்வாதாரத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது.

தேவைப்பட்டால் மனித உயிர்களையும் பலிவாங்குகிறது. நீண்ட நாட்களாகவே மனிதனை நூறு விழுக்காடு எதிரியாக பார்க்கும் ஒரே விலங்கு யானை தான் என்று நினைக்கவேண்டியது உள்ளது. வனப்பகுதிக்குள் மனிதனைக் கண்டு விட்டாலே துரத்தி அவனை கலால் மிதித்தும், தும்பிக்கையால் அடித்து கொல்லும் வரை அது ஓய்வதில்லை.

உத்தமபாளையம் வனச்சரவத்திற்கு உட்பட்ட கோம்பைக்கு மேற்கே இருக்கும் அருள்மிகு ரங்கநாதர் கோயிலின் வடக்கு பகுதியில் ஆரம்பிக்கும் இந்த மூன்று யானைகளின் அட்டகாசம், ராசிங்க புரத்திற்கு மேற்கே உள்ள பொங்குன்றம் வரை நீடிக்கிறது.

சமீப நாட்களாக இந்த யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனத்துறை அலுவலர்களிடம் கேட்டால் வெடிவைத்து விரட்டுவதற்கு மட்டுமே தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஷெட்யூலில் வரும் வனவிலங்கு என்பதால் ஏர்ஷூட் தவிர யானையை விரட்டுவதற்கு கூட அனுமதி இல்லை என்று கையை விரிக்கிறார்கள்.

அப்படியானால் இந்த விவசாயிகளை எப்படி காப்பாற்றுவது?

காட்டு யானை வேண்டும் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுவே விளை நிலங்களுக்குள் வரும்போதுதான் சிக்கல் எழுகிறது.

ஒன்று அந்த மூன்று யானைகளையும் வனபகுதிக்குள் விரட்ட வனத்துறை தயாராக வேண்டும். அல்லது ரீ டைரக்ட் கொடுக்கப்பட்டு மாற்று இடத்திற்கு அது அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இல்லையேல் போராடுவதை தவிர வேறு வழிஇல்லை, வங்கிகளில் கடன் பெற்று கந்து வட்டிக்காரர்களிடம் வட்டிக்கு பணம் பெற்று, வீட்டை அடமானம் வைத்து எத்தனையோ அப்பாவி விவசாயிகள் காணும் கனவில் தொடர்ந்து மண் விழும் என்றால் அவன் வீதிக்கு வருவதைத் தவிர வேறு வழி இல்லை.

இல்லை என்றால் தேனி மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிடுவதை தவிர வேறு வழி இல்லை என விவசாய சங்க தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

Tags

Next Story