நான்கு ஆண்டுகளாக முடங்கிய உழவர் சந்தை மேம்பாட்டு திட்டம்
Theni District News-முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999ம் ஆண்டு தேனி உழவர் சந்தையினை தொடங்கி வைத்தார். தற்போது சந்தையின் உள்ளே 70 விவசாயிகள், வெளியே 60 விவசாயிகள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். சந்தைக்கு உள்ளே தினமும் சராசரியாக 10 லட்சம் ரூபாய்க்கும் வெளியே 8 லட்சம் ரூபாய்க்கும் வியாபாரம் நடக்கிறது. தினமும் காய்கறி வாங்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். 60 வகையான காய்கறிகள் விற்பனையாகின்றன. சந்தைக்கு தினமும் வரும் விவசாயிகள், அவர்கள் கொண்டு வரும் காய்கறிகள் அவ்வளவும் பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தனி வருகை பதிவேடு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தேனி சந்தையில் காய்கறி விற்க மேலும் 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் 50 உழவர்சந்தைகளை தலா ஒரு கோடி ரூபாய் செலவில் விவசாய விற்பனைத்துறை மேம்படுத்த உள்ளது. இந்த சந்தைகளில் விவசாயிகளுக்கும், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி, சந்தைக்குள் ஹாலோ பிளாக் தளம், காய்கறிகளை இருப்பு வைக்க குளிர்பதன கிட்டங்கி, எடை போட எலக்ட்ரானிக் எந்திர தராசுகள், நவீனப்படுத்தப்பட்ட கழிப்பறை வசதிகள், டைல்ஸ் தளத்துடன் கம்ப்யூட்டர் வசதி கொண்ட நிர்வாக அலுவலகம் கட்டித்தரப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஏழு உழவர்சந்தைகளில் தேனி, கம்பம் சந்தைகள் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. எனவே இந்த இரண்டு சந்தைகளையும் மாநிலத்தின் முன்மாதிரி உழவர்சந்தைகளாக மாற்ற விவசாய விற்பனைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த சந்தைகளில் பல்வேறு கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளன. முதல் கட்டமாக தேனி உழவர்சந்தை பன்னாட்டு விற்பனை நிறுவனங்களை போல மிகவும் அதிநவீன வசதிகள் கொண்ட, குளிரூட்டப்பட்ட காய்கறி சந்தையாக மாற்றப்பட உள்ளது. இங்கு மூன்று அடுக்கு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
முதல் இரு அடுக்குகளில் தலா 100 கடைகள், மூன்றாம் அடுக்கில் 50 கடைகள் கட்டப்பட உள்ளது. தவிர காய்கறிகளை இருப்பு வைக்கவும், பதப்படுத்தவும் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்கு சுமார் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த விவசாய விற்பனைத்துறை நிதிக்காக நபார்டு வங்கியிடம் திட்ட அறிக்கையினை அனுப்பி உள்ளது. நபார்டு அதிகாரிகள் சந்தையினை நேரடி ஆய்வு செய்த பின்னர் நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த சந்தை முழுமையாக நவீன வடிவில் கட்டி முடிக்கப்பட்ட உடன் தற்போது சந்தையிலும், சந்தைக்கு வெளியிலும் பதிவு செய்து காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு இங்கு காய்கறிகள் விற்பனை செய்ய முன்உரிமை வழங்கப்படும். மாற்ற விவசாயிகள் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் போடப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. முயற்சிகளும் தொடங்கப்படவில்லை. தமிழக முதல்வர் மீண்டும் உழவர்சந்தை திட்டத்தை பற்றி ஒரு ஆய்வு நடத்தி நன்றாக செயல்படும் உழவர்சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu