விவசாய பட்ஜெட்டில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் -தேனி விவசாயிகளுக்கு பயன் தருமா?
தேனியில் திறக்கப்பட்டது முதல் ஒரு நாள் கூட செயல்படாமல் மூடிக்கிடக்கும் முருங்கை பதப்படுத்தும் மையம்.
தேனியில் மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் குளி்ர்பதன கிடங்கு இரண்டும் இரண்டு ஆண்டுகளாக பயன்பாடு இன்றி மூடிக்கிடக்கிறது. கலெக்டர் முரளிதரன் தலையிட்டு இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்த, வேளாண்மைத்துறை அமைச்சர், தேனியில் முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அறிவிப்பெல்லாம் சரிதான் முதலில் முருங்கை விவசாயிகளுக்கு வாழ்வழிக்க செலவிட்ட 3 கோடி முடங்கி கிடக்கு அதனை கவனியுங்க என விவசாயிகள் கூறியுள்ளனர்.
அதன் விபரம் பாருங்கள்:
தேனி வேளாண்மை விற்பனைத்துறை மற்றும் வணிக வரித்துரை சார்பில் பெரியகுளம் ரோட்டோரம் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அலுவலகத்துடன் கூடிய முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. இதற்கு மட்டும் 2 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி அப்போதய முதல்வர் பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து உழவர்சந்தை செயல்பட வசதியாக தகர கொட்டகைகள் அமைக்கப்பட்ட வணிக மையம் தனியாக செயல்படுத்தப்பட்டது. இதற்கும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
(தோராயமாக 40 லட்சம் ரூபாய் வரை) தற்காலிக உழவர்சந்தையாவது சில தினங்கள் செயல்பட்டது. ஆனால் முதன்மை பதப்படுத்தும் நிலையமும், குளிர்பதன கிடங்கும் ஒருநாள் கூட செயல்படவில்லை. இந்த மையத்தில் முருங்கை காய், கீரை, பூக்கள் மற்றும் இதர காய் வகைகள், கீரை வகைகளை உலர வைத்து பேக்கிங் செய்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மையம் செயல்பட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் விற்பனைத்துறை அதிகாரிகளின் அக்கரையின்மை காரணமாக இந்த மையம் ஒரு நாள் கூட செயல்படவில்லை. மாவட்ட கலெக்டர் முரளிதரன் இந்த விஷயத்தில் தலையிட்டு, நேரில் ஆய்வு செய்து மையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனை செயல்படுத்திய பின்னர் முருங்கை ஏற்றுமதி மண்டலத்தை அமைக்கலாம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu